வாகைக்குளம் வேளாண் அறிவியல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயிகள். பாரம்பரிய நெல் விதை சாகுபடி குறித்த கல்வி சுற்றுலாவில் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மாவட்ட அளவிலான விவசாயிகள் கண்டறியும் கல்வி சுற்றுலாவுக்கு கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் அறிவுறுத்தலின்படி விட்டிலாபுரம் கோவில்பத்து கிராமத்தில் இருந்து விவசாயிகள் வாகைகுளம் வேளாண் அறிவியல் மையத்திற்கு இன்றைய தினம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வாகைகுளம் வேளாண் அறிவியல் மைய பொறுப்பறிஞர் தாமோதரன் பாரம்பரிய நெல் விதை சாகுபடி தொழில்நுட்பங்கள், பாரம்பரிய விதைகள், அதன் முக்கியத்துவம், அவற்றின் சிறப்பியல்புகள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார். வாகைகுளம் வேளாண் அறிவியல் மைய பொறுப்பறிஞர் முத்துக்குமார் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
பாரம்பரிய நெல் விதை ரகங்களின் கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டனர். இந்த சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை கருங்குளம் உதவி வேளாண்மை அலுவலர் ரகுநாத் மற்றும் அட்மா திட்ட மேலாளர்கள் ராஜலட்சுமி, முத்து சங்கரி, மகேஸ்வரி ஆகியோர் மேற்கொண்டனர்.


