கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் 2026-27ஆம் நிதியாண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சௌபாக்கியா மகாலில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குப் புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் ராஜ்குமார் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். ரோட்டரி மாவட்ட கிளப் சர்வீஸ் சேர்மன் விநாயகா ரமேஷ் முன்னிலை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஷாஜகான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, புதிய தலைவராக முத்து முருகன், செயலாளராக ரமேஷ் குமார், பொருளாளராக சீனிவாசன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார். மேலும், நடப்பு நிதியாண்டில் புதிதாக இணைந்த 6 உறுப்பினர்களுக்கு, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார்.
இவ்விழாவில் மூத்த மருத்துவர் என்.டி. சீனிவாசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட சமூகத் தணிக்கை வள அலுவலர் சேகர், பசும்பொன் கல்வி அறக்கட்டளைத் தலைவர் பரமசிவம் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் பில்டர்ஸ் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் ராம்பிரசாத், கனகராஜ், சிவில் என்ஜினியர்ஸ் அசோசியேஷன் சங்க நிர்வாகிகள் காசிராஜன், ராகவன், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, ஆசியா ஃபார்ம்ஸ் பாபு, நாராயணசாமி, எம்.எஸ்.எஸ்.வி. பாபு, பரமேஸ்வரன், முத்துச்செல்வன், முன்னாள் செயலாளர் பழனிக்குமார் உட்படப் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாகச் செயலாளர் ரமேஷ் குமார் நன்றி கூறினார்.


