6. தூக்கு மேடை தியாகிகள் ஆறுமுகநேரி காசிராஜன் ராஜகோபால்
லோன் துரை கொலை சம்பவத்தில் மிக முககிய குற்றவாளிகள் தூக்கு மேடை வரை சென்ற தியாகிகள் ஆறுமுகநேரி காசிராஜன் ராஜகோபால் ஆகிய இரட்டையர் ஆவார்கள். அவர்கள் வசித்த ஆறுமுகநேரி முத்து கிருஷ்ணாபுரத்தினை நோக்கி சென்றோம். அவர்கள் குடும்பத்தினரை கண்டு விசாரிக்கவேண்டும் என்பது எங்கள் ஆசை. எங்களோடு தியாகி தங்கவேல் நாடார் மகன் முனைவர் தவசி முத்து மாறன் அய்யாவும் வந்தார்கள்.
து£க்கு மேடை, தியாகி காசிராஜன் அவர்களின் மூத்த மகன் சுபாஷ் அவர்களை நாங்கள் சந்தித்தோம். அவர் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஐவர். 3 பெண்கள், 2 ஆண்கள்
காசிராஜன் அவர்களுக்கு பல ஆண்டுகள் கடந்தே திருமணம் நடந்தது.
காசி ராஜன், காந்தி பற்றிய பாடல்கள் நன்றாக பாடுவார், பஜனை, தேவாரம், திருபுகழ் எல்லாம் பாடுவார்.
இவருக்கு குலசேகரப் பட்டினத்தில் உள்ள லோன்பதியை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது. என்றுகேட்ட போது அவரின் மகன் கூறிய பதில் வருமாறு.
அங்கு வேலை செய்பவர்கள் யாரும் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று லோன் துரை தொழிலாளிகளை கொடுமை படுத்தினார். எனவே லோன் துரைக்கு எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பதற்காக சென்றனர். இறுதியில் லோன் துரை கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இராஜ கோபால், காசிராஜ் இருவருக்குமே து£க்குத் தண்டனை கிடைத்தது. 1942 ல் இந்த சம்பவம் நடந்தது. இவர்கள் இருவரும் மெய்ஞானபுரத்தில் கைது ஆனார்கள். து£க்குத் தண்டனை பெற்ற இவர்களுக்கு ராஜ கோபால ஆச்சாரியார் வதாடினார். அவர்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளார். பின் 1946 ல் எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களையும் விடுதலை செய்து விட்டனர்.
அதன் பிறகும் காசிராஜன் அவர்களுக்கு தொழில் சரிவர நடைபெறவில்லை. அதை பற்றி அவரின் மகன் சுபாஷ் மேலும் எங்களிடம் கூறியதாவது.
விடுதலையான பிறகு எங்க பெரியப்பாவும், எங்க அப்பாவும் சேர்ந்து காயல்பட்டினத்தில் கடை வைத்தார்கள். ஆனால் வியாபாரம் சரி வரவில்லை, எனென்றால் அவர்கள் இளம் வயது முழுவதும் போராட்டத்திலேயே ஈடுபட்டிருந்தார்கள். அதனால் தொழில் அனுபவம் இல்லை. இதனால் தொழில் நஷ்டம் அடைந்தது. இவருக்கு குழந்தைகள் அதிகம் ஆகி விட்டது. எனவே குடும்பமும் பெரிய குடும்பமாக ஆகிவிட்டது. அதனால் செலவும் மிகுந்துவிட்டது அதற்காக இருந்த வயல் நிலங்கள் அனைத்தையும் விற்று குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தோம். பின்பு 1971ல் தான் பென்சன் கொடுத்தார்கள். முதன் முதலில் 1971ல் மாதம் 50 ரூ பென்சன் வந்தது. இந்த 50 ரூ வைத்துதான் ஒரு மாதத்திற்கு குடும்பத்தில் 7 நபர்களும் சாப்பிடவேண்டும். சாப்பிடனும் என்றால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருப்போம். இது உண்மை . இதைப்பற்றி நிறையபேருக்குத் தெரியாது .சாப்பாடு வைக்கும் போதே அனைவருக்கும் தட்டை வைத்து எங்கள் அம்மா பகிர்வார்கள் .இருப்பதை தட்டில் பகிர்ந்து வைப்பார்கள். நாங்களும் அதை சாப்பிட்டு விட்டு வெளியில் எதுவும் சொல்ல மாட்டோம். சாப்பிட்டு விட்டு அப்படியே எழுந்து விடுவோம்.
புத்தகம் வாங்கி படிக்கும் அளவிற்கு கூட வசதி கிடையாது. ஆனாலும் பள்ளிக்கு சென்றேன். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்தது. தற்போது ரேசன் கடையில் எடையாளராக இருக்கிறேன். என்னுடைய மற்றொரு தம்பியும் ரேசன் கடையில் தான் வேலை செய்கிறார். ஆனால் பணியை பாதியில் நிறுத்திவிட்டு பணி ஓய்வு பணத்தை வைத்து மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்து விட்டான்.
நான் எங்கள் ஊர் கோவிலில் 1995 லிருந்து நான் தான் நிர்வாகம் நடத்தி வருகிறேன். அதற்காக எனக்கு ஏதாவது தொழில் நடத்த வேண்டும் என பாத்திரங்கள் வாங்கி என் மூலமாக கல்யாண வீடுகளுக்கு வாடகைக்கு கொடுத்து வருகிறேன். எனது வீட்டம்மா யுவராணி 2001 ஆம் ஆண்டு கவுன்சிலராக பணியாற்றினார்.
அந்த நேரத்தில் எங்கள் பகுதிக்கு தாமிரபரணி தண்ணீர் கொடுத்திருக்கிறோம். நிறைய தெருக்களுக்கு தண்ணீரே இல்லாமல் இருந்தது. ஆறுமுகநேரியில் தெரு விளக்கே இல்லாமல் இருந்தது. நாங்கள் வந்த பிறகு தான் தெரு விளக்கு போட்டு கொடுத்தோம். என்று கூறினார்.
ஒ ரே தெருவில் காசிராஜன் மற்றும் ராஜகோபால் ஆகியோர் வீடு உள்ளது. ஆனால் இவர்களின் வாரிசுகள் பெரிய அளவில் வசதியானவர்களாக இல்லை. வீடுகளில் தியாகி என மிகப்பிரமாண்டமாக பெயர் எழுதி வைத்திருக்கிறார்கள். அவர் வாங்கிய பட்டயம், ராஜாஜி உடன் இருந்த புகைப்படம் எல்லாம் எங்கள் பார்வைக்கு எடுத்து தந்தார்கள் . நாங்கள் அதை பதிவு செய்யும் வகையில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
இந்த போராட்டத்தினை பற்றி ஆய்வாளர் தவசி முத்து மாறன் அவர்களிடம் கேட்டபோது, என்னுடைய தந்தை தங்கவேல் நாடார், 1942 இல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். முதல் கூட்டம் ஆறுமுகநேரியிலே இந்து துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. என்னுடைய தந்தை தங்கவேல் நாடார் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்திற்கு கே. டி. கோசல்ராம், எம். எஸ். செல்வராஜன், ராமசந்திர டோக்கோ ஜி, போன்ற பெரியவர்கள் மற்றும் தொண்டர்கள், ஆர்வலர்கள் எல்லாரும் கலந்துக்கொண்டனர். அப்போது தான் உப்பு சத்தியகிரகம் நடை பெற்றது. ஆறுமுகநேரியிலே கீரனுரிலும் உப்பு விளைந்தது. அங்கும் போராட்டம் நடந்தது. அந்த போராட்டம் நடத்துவதற்க்காக, தொண்டர்கள் எல்லாம் கோசல்ராம் தலைமையிலே ஆறுமுகனேரியில் உள்ள சந்தைககு வந்தார்கள். நிறைய பேர் கைதாகி மூன்று மாதம், ஆறு மாதம் சிறையில் இருந்தார்கள். அதன் பின்பு குரும்பூர் இரயில்வே ஸ்டேஷனை தாக்குதல் நடைபெற்றது. அப்போது கே. டி. கோசல்ராம் உள்ளிட்ட நிறைய தொண்டர்கள், வாழ வல்லானை சேர்ந்த தொண்டர்களும் கலந்துகொண்டனர். குரும்பூர் இரயில்வே ஸ்டேஷனை அடித்து நொறுக்கி அங்கே இருக்கிற துப்பாக்கியை கைப்பற்றினார்கள். அடுத்த போராட்டமாக மெய்ஞானபுரம் போஸ்ட் ஆபீஸ் தீ வைத்த வழக்கு, அதிலும் பலர் உண்டு. பெட்ரோல் குண்டு எரிந்துள்ளார்கள். குலசை லோன் துரை வழக்கில் காசிராஜன், இராஜகோபால் இருவரும் மிக முக்கிய கைதியாகி தூக்கு மேடை சென்றனர். . உடன்குடியை சேர்ந்தவர்களுக்கு ஜென்ம தண்டனை கிடைத்தது.
அதில் கலந்து கொண்டவர்களுக்கும், பொது மக்களுக்கும், போராட்ட தியாகிகள் குடும்பத்திற்கும் அடி, உதைகள் கிடைத்துள்ளது. அந்த கால காவல்துறை ரொம்ப அநாகரிகமாக பெண்களிடம் நடத்தியுள்ளார்கள்.
லோன் துரை குலசேகர பட்டினத்தில் உப்பு தொழிற்சாலையில் வேலை செய்பவர்களை ரொம்ப கொடுமை செய்துள்ளார். அடிமை படுத்தினர். காந்தியின் கொள்கை அகிம்சை முறை. எப்படியாவது சுதந்திரத்தை பெற வேண்டும் என்பது நேதாஜியின் கொள்கை. எப்படியாது தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று தான் லோன்துரையை வெட்டி கொன்றனர்.
எங்கள் வீட்டில் இருந்து எல்லோரும் அடிக்கடி சந்திப்பது உண்டு. சந்திக்கும் போது, எங்கள் வீட்டில் வைத்து துப்பாக்கியை சோதித்தனர். இராஜகோபால், காசிராஜன் அண்ணாச்சி எல்லாரும் உக்காந்து எங்க வீட்டில் தான் பேசினார்கள். பேசும் போது அங்கு துப்பாக்கி வெடித்தது. அது காசிராஜன் அண்ணாச்சியின் கையில் இருந்து ரத்தம் கொட்டியது. பின் கட்டு போட்டு வைத்தியம் பார்த்துள்ளனர். இதே போல், திருச்செந்தூர் சிறைச்சலையிலே காசிராஜன் அண்ணாச்சியை வார்டன் அடித்தார். அவருக்கு இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. அவருக்கு இரத்தம் கொடுத்தது என் அப்பா தங்கவேல் நாடார்தான். அதே போல் பெஞ்சமீன் அவர்களுக்கு ஜெயிலில் வைத்து இரத்தம் கொடுத்ததும் என் அப்பா தான். எம். எஸ். செல்வராஜன் அவர்களை போலிஸ் அடிக்க இரத்தம் வடிந்தது. வெயிலில் நிற்க வைத்து தண்ணீர் குடுக்காமல் கொடுமை படுத்தியுள்ளனர் போலிசார். என் அக்கா தான் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்துச் சென்று கொடுத்துள்ளார். தியாகிக்கு தான் பெண் கொடுக்க வேண்டும என்று என் அக்காளை என் அத்தான் தியாகி ச. அருணாச்சல நாடாருக்கு கட்டி கொடுத்துள்ளார் என் தந்தை.
தூக்கு மேடை காசி ராஜன், ராஜகோபால் ஆகியோர் குடும்பம் தற்போதும் வறுமையிலேயே வாடி வருகிறது.¬ என்று அவர் கூறினார்.
(தொடரும்)


