தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (மார்ச் 9) பல்வேறு கிராமங்களில் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதால்,
தமிழக அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வண்ணமாகவும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அரசாணை படி, ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் பட்டா தொடர்பான மனுக்கள் பெற்று தீர்வுகாண சிறப்பு முகாம்கள் நடத்தி பொது மக்களின் குறைகளை முழுமையாக களைந்திட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒவ்வொரு புதன்கிழமை மற்றும் வெள்ளி கிழமைகளில் அனைத்து வட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது நிலங்களுக்கான பட்டா தொடர்பான பிரச்சனைகளான கணினியில் புலஎண்கள் திருத்தம், உட்பிரிவுஎண்கள் திருத்தம், பரப்புதிருத்தம், பட்டாதாரர்களின் பெயர்கள் மற்றும் தந்தை/பாதுகாவலர் பெயர்கள் திருத்தம், உறவுமுறைதிருத்தம், பட்டாவில் சில குறிப்புகலங்களில் காலியாக விடப்பட்டுள்ளமைக்கான திருத்தங்கள், பிற அருகாமையில் உள்ள பட்டாதாரர்களின் பெயர்கள் தங்களது பட்டாவில் இடம் பெற்றுள்ளமைக்கான திருத்தங்கள் போன்றவற்றுக்காகவும், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத்திட்டங்கள் குறித்த மனுக்கள், இலவசவீட்டுமனைப் பட்டாக்கள் கோரல், ஆக்கிரமிப்பு வரன்முறைப் படுத்துதல், பல்வேறு வகையான சான்றுகள் கோரல், குடிநீர் வசதி, சாலை வசதி கோரல் போன்ற இனங்கள் தொடர்பாகவும் பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 09.03.2022 அன்று ஏரல் கச்சினாவிளை, எட்டயபுரத்தில் டி.அருணாசலபுரம், கயத்தார் கொத்தாளி, விளாத்திகுளத்தில் குறளையம்பட்டி, மந்திகுளம், சித்தவன் நாயக்கன் பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி தமது கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்து தீர்வு காண கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி முகாமில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவரும் கோவிட்-19 தொற்றிலிருந்து தவிர்க்கும் பொருட்டு, சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்துவரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் முறையாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


