ஸ்ரீவைகுண்டம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனுடன் குடியிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இலவச புதிதாக பசுமை வீடு கட்டும் அரசு ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் மாற்றுத்திறனாளி. இவரது மகன் உதயகுமார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
பானுமதியின் கணவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அவரது உழைப்பை மட்டுமே நம்பியிருந்த இந்த குடும்பம் கடந்த 7 வருடமாக வாழ்வாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு அரசு கட்டிக்கொடுத்த வீட்டில் தற்போது வரை பானுமதி தனது மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயது மகனுடன் குடியிருந்து வருகிறார். வீட்டின் மேற்கூரை மிகவும் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் வண்ணம் உள்ளது.
இதனையடுத்து ஆட்சியர் இந்த குடும்பத்திற்கு பட்டாவும், இலவச வீடு வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு நேரடியாக வந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வீட்டினை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பானுமதி என்ற பெண்ணிடம் நீங்கள் இருக்கும் இந்த இடத்திற்கு பட்டாவும், இதே இடத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிய இலவச வீடும் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் இந்த வீடு 3 மாத காலத்தில் கட்டப்பட்டு நீங்கள் குடியிருக்க புதிதாக வீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பானுமதியிடம் வழங்கினார்.


