தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மங்கம்மாள் சாலை தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகக்கனி(35). பீடி சுற்றும் தொழிலாளி. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த குடும்பத்தினை சேர்ந்த இவர்களுக்கு பவேஸ்வரி(11) சுகனேஷ்(9) என்ற இரு குழந்தைகள் இவர்களுக்கு கடன் சுமை இருந்துள்ளது. இதனால் கடனை அடைக்க வேண்டுதலாக திருச்செந்தூருக்கு முதல் முதலாக நடைபயணம் வந்துள்ளார்கள். சுமார் 20 பேர்கள் கொண்ட குழுவினருடன் வந்த இவர்களின் குழந்தைகளை பெரியப்பா சொரிமுத்து ஆட்டோவில் கூட்டிச்சென்று விட்டார். கணவனும் மனைவியும் கடந்த 7ந்தேதி இரவு 9 மணி அளவில் செய்துங்கநல்லூரை அடுத்த கருங்குளம் தூதுகுழி குளத்தின் கரையில் வழியாக சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
மற்றவர்கள் வேகமாக முன்னால் சென்று கொண்டிருந்தனர். பாதி பேர் கருங்குளம் பெட்ரோல் பல்க வந்து சேர்ந்து விட்டனர். இயற்கை உபாதையை கழிக்க சுரேஷ் அருகில் உள்ள வயலுக்குள் இறங்கவே நாகக்கனி சாலை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வெள்ளை நிற கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகக்கன்னி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதன்பின் அந்த வெள்ளை நிறக்கார் சிட்டாய் பறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்துங்கநல்லூர் போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் அனந்த முத்துராமன் சம்பவ இடத்திற்கு சென்று நாகக்கன்னி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாககன்னி வாழ்க்கையில் மிகவும் கஷ்ட நிலையிலேயே இருந்துள்ளார். தனது பிறந்த வீட்டிலும் கஷ்பட்டுதான் வளர்ந்துள்ளார். தாய் பீடி சுற்றியே மகளை மணம் முடித்து கொடுத்துள்ளார். கணவனும் மனைவியும் கூலி வேலை செய்து தனது குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். இந்த நிலையில் இவர்களுக்கு கடன் இருந்துள்ளது. முருகன் கோயிலுக்கு நடந்து சென்றால் கடன் தீரும் என நேர்ச்சையால் நடந்து சென்ற இடத்தில் விபத்தில் இறந்துள்ளார். தாயை இழந்த குழந்தைகள் கதறி அழுதது மனதை உருக்குவதாக இருந்தது.


