திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடி செலவில் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டது.
கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 2013-ம் ஆண்டு முடிவடைந்து வாகனப் போக்குவரத்துக்குத் தொடங்கியது. இந்தச் சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்தப் பாலத்தைக் கடந்து தினமும் தூத்துக்குடி துறைமுகத்திற்குச் செல்லும் வாகனங்கள், விமான நிலையத்திற்குச் செல்லும் வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தைக் கடந்து செல்கின்றன.
கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் நடுவே பெரிய ஓட்டை விழுந்தது. இந்தப் பாதையில் 108 நாட்கள் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரூ.3.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பாலம் முழுவதுமாக சீரமைக்கப்பட்டது.
சீரமைக்கப்பட்ட 3 ஆண்டுகளில் மீண்டும் பாலத்தில் இரண்டு இடங்களில் கடந்த மார்ச் மாதம் பெரிய அளவில் ஓட்டைகள் விழுந்தன. இதனால் இந்த வழியாக வாகனப் போக்குவரத்து கடந்த 14.03.2020 முதல் நிறுத்தப்பட்டது. ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் பாலம் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் கடந்த ஒன்றரை வருட காலமாக ஒருவழிப் பாதையில் சென்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 2ம் தேதி அந்த ஒருவழிப்பாதையில் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் இடதுபுறத்தில் ஒரு இடத்தில் சாலையில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே முறப்பநாடு போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இடத்தை பேரிகார்டு போட்டு அடைத்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்த பாலத்தில் விழுந்த ஓட்டையிலிருந்த சிமெண்டை அகற்றி புதிதாக கான்கிரிட் அமைத்து தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை முழுமையாகப் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


