
கடந்த 2 வாரங்களாகத் தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாவநாசம் அணைக்கட்டிலிருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றின் குறுக்கே வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் தடுப்பணை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஆனால் தடுப்பணையின் ஆற்றின் மேல் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் தற்போது தாமிரபரணி ஆற்றில் வருகின்ற வெள்ளநீரில் கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருக்கும் பனைமரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக வெள்ள நீர் வந்தால் வெள்ள நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் கொண்டு அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியைச் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.