முத்துவேல் கருணாநிதி சூன் 3, 1924 – ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக் கல்வியைத் திருக்குவளையில் பெற்றார். பின்னர்த் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார். பள்ளியிறுதித் தேர்வில் இவர் தேர்ச்சியடையவில்லை.
கருணாநிதி, தமது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தமது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை 7-7-1944 அன்று உருவாக்கினார். அவரே அதன் தலைவராக மு.கருணாநிதியும் அமைச்சராக கே.வெங்கிடாசல என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. அதன் வழியாக மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார். சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான “அனைத்து மாணவர்களின் கழகம்” என்ற அமைப்பாக உருப்பெற்றது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார்.
முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார். சற்றொப்ப 25 இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953-இல் சென்னையில் மாத இதழாகத் தொடங்கினார். 1960-ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார்.
நீதிக்கட்சியின் தூணாகக் கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ஆவது அகவையில், அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கருணாநிதி, தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் (1953) ஈடுபட்டது ஆகும். இந்தத் தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கல்லக்குடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமெண்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரம் என மாற்றப்பட்டது. தி.மு.க. அந்தப் பெயரைக் கல்லக்குடி என மீண்டும் மாற்ற வேண்டுமென விரும்பியது. கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர். மேலும் இரயில் மறியலிலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்.
1957-இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி, திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, “மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டைப் பாதுகாக்க, இஃது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும் இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று முழக்கமிட்டார்.
அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடுவண் அரசின் புரிந்து கொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.


