கயத்தாறில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா, நேற்று மாலை மிகச் சிறப்பான முறையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் தொடக்கமாக, ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.
திண்டுக்கல் சேசுசபை இன்னாசியர் ஆன்மீக மையப் பங்குத்தந்தை தனராஜ் மற்றும் கயத்தாறு பங்குத்தந்தை எரிக்ஜோ ஆகியோர் இணைந்து திருவிழாக் கொடியினை ஏற்றி வைத்தனர்.கொடியேற்றத்திற்கு முன்னதாக, ஆலயத்தில் சிறப்புத் திருப்பலிகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, அன்னை மரியாளின் உருவம் பொறித்த கொடியினை, மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கும் மேற்பட்ட இறை மக்கள் ஐந்து ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இந்த நிகழ்வில் கயத்தாறு உபதேசிகர் பிரான்சிஸ், அருள் சகோதரிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இறை மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.0702


