ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டப்பகலில் பரபரப்பு. வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் கத்தியை வைத்து தாய், தந்தையை மிரட்டி 14 அரை பவுன் நகை கொள்ளை.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் தமிழன்நகரைச் சேர்ந்தவர் உதயக்குமார். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுதா. இவர் ஸ்ரீவைகுண்டம் காசநோய் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு அரவிந்த் மற்றும் ஆனந்த் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இன்று மதியம் 4 மணி அளவில் வீட்டில் அரவிந்த் மட்டும் தனியாக ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். மனைவியை பேருந்து நிலையத்தில் இருந்து அழைத்து வருவதற்காக உதயகுமார் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அதை நோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து வீட்டினுள் வந்துள்ளனர்.
உடனே அரவிந்த் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டின் பீரோவை திறக்க கூறியுள்ளார்கள். அவனும் திறந்துள்ளார். இதற்கிடையில் அரவிந்த் கையில் இருந்த போனில் தனது தந்தைக்கு விபரத்தை எப்படியோ தெரிவித்துள்ளார்.
அந்த சமயத்தில் தந்தையும், தாயும் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் அணிந்திருந்த நகையை தராவிட்டால் உனது மகனின் கழுத்தை அறுத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்த சுதா தனது கழுத்தில் கிடந்த 7 பவுண் தாலிச்செயினை கழட்டி கொடுத்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த 7 அரை பவுன் நகை உள்பட 14 அரை பவுன் நகையை மூன்று பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் பறித்துச் சென்றது.
அதன்பின்னர் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல்நிலையத்திற்கு உதயகுமார் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் அருள், உதவி ஆய்வாளர் கருத்தையா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை சேரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டப்பகலில் ஆன்லைன் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவனின் கழுத்தில் தாய் தந்தை முன்னிலையில் கத்தியை வைத்து நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


