பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில் சமூகத்தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நூலக கட்டிடம் முன்பு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான சமூகத்தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நூலக கட்டிடம் முன்பு நடந்தது.
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது.இதில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 கிராம ஊராட்சிகளில் செப்.2ம் தேதி முதல் 6ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
பாஞ்சாலங்குறிச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார்.ஊராட்சி மன்ற தலைவர் கமலாதேவி,ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஸ்ரீநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தினை ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் வழிநடத்தி மக்களுடன் கலந்துரையாடல் செய்தார். கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் யோகராஜ்,கிராம வள பயிற்றுநர்கள் முத்துலட்சுமி, ஜெயபாலா, ரேவதி, ஆதிலட்சுமி, மாரியம்மாள், வித்யா,உள்பட வார்டு உறுப்பினர்கள்,பணித்தள பொறுப்பாளர்கள்,உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகஜோதி நன்றி கூறினார். இதேபோல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் மலைப்பட்டி, ஓட்டப்பிடாரம் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


