இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் சூட்டிங் குரும்பூர் அருகே மணத்தியை அடுத்த தொட்டியன்குடியிருப்பு பகுதியில் இன்று சூட்டிங் துவங்கியது.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்நிறுவனங்கள் பல புதிய திரைப்படங்களை இணைந்து தயாரிக்கவுள்ளனர். முன்னணி நட்சத்திர இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று குரும்பூர் அருகே மணத்தியை அடுத்த தொட்டியன்குடியிருப்பு பகுதியில் தொடங்கியது. பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடதக்கது.
அமைதிக்கான பாதையைத் தேடிய, ஒரு போர்வீரனின் கதையை, நம் கண்களுக்கு விருந்தாக கொண்டு வருகிறது. இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை நடிகர் விக்ரம் கிளாப் தட்டி தொடங்கி வைத்தார்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் படங்கள் என்றாலே கிராமத்து வாசம் வீசும் படமாக பார்க்கப்படுகிறது. மேலும் அவரது படங்களில் சமூக நீதி பேசும் படமாகவும் இருக்கும். இந்த நிலையில் இந்த படம் மணத்தி கணேசன் என்பவரது வாழ்க்கை தழுவி எடுக்கும் படமாக பேசப்பட்டு வருகிறது.
இதற்காக தொட்டியன்குடியிருப்பில் பிரமாண்டமாக கிராமத்து சாயலில் செட் அமைக்கப்பட்டுள்ளது. அது தவிர கபடி விளையாட்டுகள் விளையாடுவதற்கு ஏதுவாகவும் செட் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கபடி வீரரின் கதையை கொண்டு தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. மணத்தி கணேசன் என்பவரும் ஒரு கபடி வீரர்.
கடந்த மாதம் இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது சொந்த ஊருக்கு வந்தபோது செய்தியாளர்களிடம் பேசுகையில், வாழை திரைப்படம் திரைப்பட விருதுகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதனால் அந்த படம் ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் வெளியாகும்.
அதைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரமை வைத்து எடுக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் இந்த படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டராக சக்திகுமார், மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும், ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் வழங்கும், பைசன் காளமாடன், அற்புதமான படைப்பாளியான மாரி செல்வராஜின் இயக்கத்தில், மனித ஆத்மாவின் வெற்றி வேட்கையைப் பேசும் கலைப்படைப்பாக, மிக உன்னதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது




