நவத்திருப்பதி ஸ்தலங்களில் முதல் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் அமைந்துள்ளன. நவதிருப்பதி என்று அழைக்கப்படும் அந்த ஸ்தலங்களில் முதலாவதாகவும் சூரிய அம்சமாகவும் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோவில் விளங்குகிறது.
இந்த கள்ளபிரான் கோவிலில் சித்திரை பிரம்மோஸ்சவ விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நாள்தோறும் சுவாமி காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா கண்டருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடந்தது. முன்னதாக சுவாமி கள்ளபிரான் அதிகாலையில் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
அதன்பின்னர் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற கோஷங்களுடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரானது நான்கு ரதவீதிகளில் வலம் வந்தது.
அதிகாலையிலேயே வெயில் அதிகரித்து வந்ததால் திருத்தேர் ஓடம் வீதிகளில் கோவில் நிர்வாகம் சார்பில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் சார்பில் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. வெயிரை கூட பொறுப்படுத்தாமல் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் தேருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


