ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் அரசு பேருந்து வயல்வெளியில் கவிழ்ந்து விபத்து. 10க்கும் மேற்பட்டோர் காயம்.
திருச்செந்தூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று இன்று காலை 10 மணி அளவில் திருநெல்வேலி சென்று கொண்டிருந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கருங்குளத்தில் பெட்ரோல் பல்க் அமைப்பதற்காக வயல்வெளிகளில் மணல் கொட்டி நிரப்பி கொண்டிருந்த லாரி திடிரென்று சாலையின் குறுக்கே வந்தது. இதில் லாரி மீது பேருந்து மோதாமல் இருப்பதற்காக அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை திருப்பியபோது அரசு பேருந்து வயல்வெளிக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையிலான போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் பேருந்தில் சிக்கியிருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி டிரைவர் லாரியை நடுரோட்டில் விட்டு தப்பியோடினார். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் த¬மையிலான போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.


