அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம்…..
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை வரவேற்று பாராட்டுகிறோம்.
தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ.வியனரசு அறிக்கை
==================================
தமிழ்நாட்டு அரசுப் பணிக்கான அனைத்து தேர்வுகளிலும்
” தமிழ்மொழி” தேர்வு அதிலும் 10 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடம் கட்டாயம் என அரசாணை வெளியிட்ட இந்த அறிவிப்பின் வாயிலாக இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய இயக்கங்கள்
குறிப்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
நாம் தமிழர் கட்சி,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,
பாட்டாளி மக்கள் கட்சி
போன்ற தமிழர் கட்சிகள் குரல் கொடுத்தும் போராடியும் வந்துள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசுப் பணிகளான, தொடர்வண்டிப் துறை, வானூர்தித் துறை, கப்பல் போக்குவரத்துத்
துறை, வங்கித்துறை, அஞ்சல்துறை, வருவாய் வரித்துறை, அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, திருச்சி பாரத மிகுமின் நிறுவனம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்தியன் ஆயில் நிறுவனம், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, சேலம் உருக்காலை, ஆவடி படைக்கலன் தொழிற்சாலை என அனைத்து துறைகளிலும் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதுபோததென்று கடந்த கால அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் இந்தியா முழுவதும் உள்ளவர்கள் மற்றும் நேபாளம், பூட்டான் ஆகிய அயல் நாடுகளைச் சேர்ந்தவர்களும் எழுத விண்ணப்பிக்கலாம் என 2016 இல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
இத்தகைய நடவடிக்கை, தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள சுமார் ஒரு கோடி தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளைச்
சிதைக்கும் என்றும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழர் இயக்கங்களும் கண்டித்திருந்தன. அச்சட்டத்திருத்தத்தைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன.
அதனையெல்லாம் கொஞ்சமும் புரிந்து கொள்ளாத அ.இ.அ.தி.மு.க அரசு கடந்த 2019 இல், மின்வாரியம் மற்றும் பொதுப்பணித்
துறைப் பணி நியமனங்களில் தமிழே தெரியாத வெளி மாநிலத்தவர்களைப் பணியில் சேர்த்தது.
குறிப்பாக, தமிழ்நாடு மின் வாரியத்தில் 325 துணை மின் பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கானத் தேர்வில், ஆந்திரா, கேரளா, மகாராட்டிரா உள்ளிட்ட வெளிமாநிலத்தவர் 38 பேர் தேர்வானார்கள்.
இந்த தேர்வு முறையைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி 2019 தொடக்கத்தில் சென்னை சேப்பாக்கத்தில்
பெரும் போராட்டம் நடத்தியது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரில்
பல இலட்சம் தமிழர்களைத் திரட்டி
பெரும் மாநாடு ஒன்றை நடத்தியும் வலியுறுத்தியது.
அதன்விளைவாக 38 வெளிமாநித்தவர்களின் பணி நியமனங்கள்
நீக்கமும் செய்யப்பட்டது.
கடந்த கால அ.இ.அ.தி.மு.க அரசின் இத்தகைய பொறுப்பற்ற, தமிழுணர்வற்றப்
போக்கால்,
சொந்த மண்ணிலேயே தமிழர் அகதிகள் ஆகும் நிலை ஏற்படும். குறிப்பாக, தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலம் இருண்டு போகும் பேராபத்தைப் புரிந்து கொண்டு, தமிழர் கட்சிகள் பல கட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளன.
இதற்காக, தமிழ்நாட்டு அரசுப் பணிகள் 100 விழுக்காடு தமிழர்களுக்கே என்றும் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசுப் பணிகள் மற்றும் தனியார் துறைப் பணிகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே எனச் சட்டம் இயற்றுமாறும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன என்பதையும் இங்கு சுட்டிக் காட்டி
இறுதியாக இதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டுமெனவும்
தமிழ்நாட்டரசைத்
தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
என்றாலும், தமிழர் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இனி நடத்தப்படும் அனைத்துப் போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருப்பதை அனைத்துத் தமிழர் கட்சிகளின் சார்பில் வரவேற்கிறோம்.
இந்நடவடிக்கையை
மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுத்து ஒட்டு மொத்தத் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறோம்.
தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100 விழுக்காடு, வேலைக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தாள் கட்டாயம் என்ற அரசாணையை, அடுத்தடுத்து வரும் அரசுப்பணியாளர்களுக்கானத் தேர்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசைத் தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
அத்துடன் தமிழ்நாட்டில் இயங்கும் நடுவண் வாரிய கேந்திர வித்யாலாயா பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் கட்டாயம் இல்லை என்ற அவல நிலையுள்ளது. இது தொடர்பான வழக்கொன்றை சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை
இரண்டு நாட்களுக்கு முன் தள்ளுபடி செய்திருப்பதை தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவனத்தில் கொண்டு அப்பள்ளிகளிலும் தமிழ்மொழிப் பாடம் கட்டாயம் என தனிச் சட்டம் ஒன்றை இயற்றிடமுன் வருமாறு தமிழ்நாடு அரசைத் தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி வேண்டிக் கொள்கிறது


