தூத்துக்குடி மாநகராட்சியில் நீண்ட நாட்களாகச் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாகத் துண்டித்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 2025-26-ஆம் நிதி ஆண்டு வரை (31.03.2026 வரை) சொத்து வரி மற்றும் குடிநீர்க் கட்டணம் செலுத்தாத வரி விதிப்பதாரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் படியும், கிழக்கு மண்டல உதவி ஆணையரின் அறிவுறுத்தலின் படியும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 24, 29, 38, 39 மற்றும் 41 ஆகிய பகுதிகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன் பகுதியாக வடக்கு ரதவீதி, சந்தை ரோடு, மீனாட்சிபுரம் மேற்கு, பாளையங்கோட்டை ரோடு மற்றும் குரூஸ்புரம் ஆகிய பகுதிகளில் 2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்திற்குச் சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் உடனடியாகத் துண்டிக்கப்பட்டன. இக்கட்டிடங்களின் வரி நிலுவைத் தொகை ரூ.6,000 முதல் ரூ.95,000 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள், தங்களது சொத்து வரி நிலுவையை 3 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், சட்ட விதிகளின்படி அடுத்தகட்டமாக ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் தங்களது கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர்க் கட்டணம், திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடைக் கட்டணம் போன்ற வரிகளை நடப்புக் காலம் வரை செலுத்தியுள்ளனரா என்பதைச் சரிபார்த்து, நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும். இதன் மூலம் குடிநீர் இணைப்புத் துண்டிப்பு மற்றும் இதர சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.


