தூத்துக்குடி மாவட்டம் மூக்குபீறி கிராமப்புறத் தமிழ் மன்றம் மாதாந்திரக்கூட்டம் மூக்குபீறி தமிழ் மன்ற அரங்கில் நடந்தது. மன்றத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கவிஞர் மூக்குப்பீறி தேவதாசன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி, தேரிக்காட்டு எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார். அவர் பேசும் போது தாமிரபரணி நதி சங்க காலத்தில் இருந்தில் புகழப்படும் நதியாகும். குடிதண்ணீர், மின்சாரம், தொழிற்சாலை, விவசாயம் என பல்வேறு வகையில் நெல்லை , தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்களுக்கு பயன்தருகிறது. இந்த நதியை நாம் பேணி பாதுகாக்கவேண்டும். ஆங்கிலேய கலெக்டர் பக்கிள் துரை காலத்திலேயே தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதிகையில் உள்ள மரங்களை வெட்டி தேயிலை தோட்டம் அமைக்க கூடாது என இங்கிலாந்து சென்று தடை உத்தரவு வாங்கி வைத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் பொதிகை மலையில் மரங்களை வெட்டினால் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் பாலைவனமாக மாறி விடும் என எழுதி வைத்து சென்றுள்ளார். எனவே நதியை பாதுகாக்க தவறினால் நம் மாவட்டத்தில் வரலாற்று பிழையாக மாறி விடும். எனவே நதியை காப்பாற்ற ஒவ்வொருவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் வீரபாலாஜி, ஜான் பிரிட்டோ, கணேசன் , மந்திரம், அந்தோணி ராஜ், கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மூக்குபீறி கிராமப்புறத் தமிழ் மன்ற உறுப்பினர் விவின் ஜெயக்குமார் நன்றி கூறினார்.