
கோபாலசமுத்திரத்தில் பல்வேறு பிரபலங்கள் வசித்து வருகிறார்கள். அதைப்பற்றி நாம் நிறைய பேசிக்கொண்டே இருக்கிறோம். பல வேளைகளில் விடுபட்ட பிரபலங்களை சேர்க்க வேண்டும் என முயற்சி செய்த போது, அய்யோ இந்த பிரபலத்தினை எப்படி விட்டு விட்டோம் என வருத்தப்படும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. அப்படி விடுவட்ட ஒரு அதிகாரியை பற்றி தான் தற்போது பேசப்போகிறோம்.
பாளையங்கோட்டை தாசில்தாராக பணியாற்றி வரும் செல்வம் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. இவர் அலுவலகத்தில் பல்வேறு தளங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டாலும், இந்த நாட்டுக்காக, இந்த நாட்டின் சுவாசத்துக்காக தனது சொந்த நிலத்தில் சமூக காடுகள் வளர்க்கிறார் என்ற செய்தி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
ஏற்கனவே இவரை பற்றி நான் நன்கு அறிந்திருந்தேன். நெல்லையை பொறுத்தவரை புத்த கண்காட்சி என்பது மிகவும் சிறப்பாக நடைபெறும். தற்போது தமிழக அரசு மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது. ஆனால் முற் காலத்தில் சென்னையில் நடை பெறும் புத்தக கண்காட்சிக்கு பிறகு நெல்லை உள்பட புத்தக கண்காட்சித் தான் மிகச்சிறப்பாக நடைபெறும். அந்த சமயத்தில் பல அதிகாரிகள் புத்தக கண்காட்சியை நடத்த மிகச் சிறப்பாக பணி புரிவர். அப்படி பணிபுரிபர்களில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் செல்வம் தாசில்தார்.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட் டத்தினை இணைத்து பொருநை இலக்கியத் திருவிழா வருடந்தோறும் நெல்லையில் நடைபெறுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து இந்த திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு ஆளுமைதான் கோபால சமுத் திரத்தில் சேர்ந்த செல்வம் தாசில்தார். இவரிடம் அவர் செய்த பணிகள் குறித்து கேட்டோம். அவர் எங்களிடம் பேசஆரம்பித்தார்.
நான் கோபாலசமுத்திரம் கிராமத்தில் கடந்த 48 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது தந்தையின் பெயர் கணேசன் . அவரது தந்தையு-ம் எனது தாத்தா வுமான வேலாயுதம் அவர்களின் சொந்த ஊர் கடையம் அருகில் உள்ள ரவணசமுத்திரம் கிராம மாகும். எனது தந்தையின் தாயார் திருமலையம்மாளின் சொந்த ஊர் கோபாலசமுத்திரம் என்பதால் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே கோபால சமுத்திரம் வந்துள்ளனர்.
ரவண சமுத்திரம் கிராமம் ராமநதியின் கரையில் உள்ள செழுமையான ஊர் ஆகும். அது போலவே கோபாலசமுத்திரம் கிராமமும் தாமிரபரணி நதியினால் செழுமையும் வளமையும் மிக்க ஊராக உள்ளது.
நான் 1975 இல் பிறந்தேன் எனது பள்ளி படிப்பு துவக்கத்தில் பஞ்சாயத்து யூனியன் துவக்க பள்ளியிலும் தொடர்ந்து பண்ணை வெங்கட்ராமையர் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். பண்ணை வெங்கட்ராமையர் உயர்நிலைப் பள்ளி ஆனது 1904 முதல் செயல்பட்டு வரும் ஒரு நூற்றாண்டு கண்ட மிகச்சிறப்பான பள்ளி ஆகும். இப்பள்ளியில் படித்த பலர் உயர் பதவி வகிக்கின்றனர். இப்பள்ளி தாமிரபரணி ஆற்றின் கரையோரமாக இயற்கை சூழலில் அமைந்துள்ளதால் நாங்கள் மிக மகிழ்ச்சியுடன் படித்து வந்தோம். இப்பள்ளிப்படிப்பு எனக்கு பண்பையும் மாண்பையும் பெருமள வில் தந்துள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது. தொடர்ந்து மா.தி.தா இந்து மேல் நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து கல்லூரி படிப்பினை ம.தி.தா இந்து கல்லூரியில் தொடர்ந்தேன். எனது பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரி படிப்புகள் என் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது. பிஎஸ்சி கணிதம் முடித்துள்ளேன். தொடர்ந்து மனவளக்கலை மூலமாக எம்எஸ்சி யோகா முடித்துள்ளேன் . தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு 2000 வருடத்தில் இளநிலை உதவியாளராக வருவாய்த் துறையில் பணியினை தொடங்கி இன்று வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறேன்.
தாமிரபரணி நதியின் நீர் மண்வளத்தோடு மனிதரது மனவளத்தையும் பெருகச் செய்யும் தன்மை கொண்டது. ஆற்றல் மிக்க பெரியவர்கள் எழுத்தாளுமையில் சிறந்தவர்கள் அனைவருக்கும் நதியின் நீர் தான் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. நான் பணிக்கு வந்து 24 ஆண்டுகள் ஆனாலும் கோபாலசமுத்திரம் கிராமத்தையும் சுத்தமான தாமிர பரணி நீரையும் பிரிய மனமில்லாமல் எனது பெற்றோருடனே இங்கு வசித்து வருகிறேன். சுத்தமான காற்றை சுவாசித்து வருகிறேன். நாம் பருகும் நீரும் சுவாசிக்கும் காற்றும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டும் நம் வருங்கால சந்ததியினர் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க நெல்லை நீர்வளம் என்ற அமைப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு அவர்களின் ஆலோசனையின் பேரில் ஏற்படுத்தப் பட்டு தொடர்ந்து தற்போதைய மாவட்ட ஆட்சியர் கா .ப கார்த்திகேயன் அவர்களது ஊக்கத்தின் பேரில் இன்று ஆயிரக் கணக்கான தன்னார் வலர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
பொருநை நெல்லை இலக்கிய புத்தகதிருவிழா மற்றும் பொருநை நெல்லை புத்தகத் திருவிழாக்கள் நடத்துவதில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். என்று அவர் கூறினார்.
இவரை பொறுத்தவரை அதிகமாக யாரிடமும் பேசமாட்டார். இவரை பற்றி தகவல் திரட்ட பல முறை நான் பேசியும் பெரிய அளவில் குறிப்பு தரவில்லை. எனவே இவரை பற்றி கோபாலசமுத்திரத்தினை சேர்ந்த சமூக சேவகர் நிவேக அவர்களிடம் விசாரித்தேன்.
அவர் இவரை பற்றி கேட்டவுடனே உற்சாகம் அடைந்தார். கோபாலசமுத்திரத்தில் இயற்கை சம்பந்தப்பட்ட எந்த களப்பணியாக இருந்தாலும் முதலிடத்தில் இருப்பவர் செல்வம் தாசில்தார். இவர் பிளாஸ்டிக்கை ஒழிக்க நாங்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால் சாரத்தினை மடித்துக் கட்டிக்கொண்டு எங்களோடு வந்து பிளாஸ்டிக்கை பொறுக்க ஆரம்பித்து விடுவார். அதோடு மட்டுமல்லாமல் போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு விளம்பரம் செய்யாமல் வெளியே தெரியாமல் புத்தகங்கள் வாங்கி கொடுத்து உதவுவார். இவர் காடுகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். மேலச்செவல் என்னும் இடத்தில் தனது சொந்த நிலமான 5 ஏக்கர் நிலத்தில் சமூக காடுகளை வளர்த்து வருகிறார். இந்த இடத்தில் அவர் வருமானம் வரும்படியாக எந்த பயிரும் செய்யவில்லை. இயற்கை வளம் பெற, சுற்றுபுறம் நல்ல காற்று கிடைக்க வேண்டிய மரங்களை மட்டும் வளர்த்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் பழமையான கூட்டுக் குடும்பங்களை விரும்புவர். தான் நினைத்து இருந்தால் தனது வேலைக்காக சொந்த ஊரை விட்டு விட்டு நகரத்திற்கு இடம் பெயர்ந்து இருக்கலாம். ஆனால் இவர் தனது தாய் தந்தையருடன் கோபாலசமுத்திரத்திலேயே வசித்து வருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. என்றார்.
இவரின் படம் ஒன்று வேண்டும் என கேட்ட போது அலுவல் காரமான தர தாமதமாகி கொண்டே இருந்தது. நிவேக்கிடம் இருந்து தான் இந்த பு¬க்படத்தினையும் பெற்றுக்கொண்டேன்.
இதுபோல கோபாலசமுத்திரத்தில் பல ஆளுமைகள் உள்ளனர். இதில் மற்றுமொரு ஆளுமை குறித்து இனி நாம் காணலாம்.
(நதி வற்றாமல் ஓடும்)