தூய சவேரியார் கல்லூரியில் வேதியியல் துறையில் சீனிவாசன் என்ற பேராசிரியர் பாளை தெற்கு பஜாரில் இருந்தார். ஒரு முறை வாசலில் அவர் நின்று பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த வழியே வந்த காவல் ஆய்வாளர் மகன் யாரோ ஒரு பெண்ணை கேலி செய்வதை பார்த்து சத்தம் போட்டாராம். அவன் நேரே அவனது அப்பாவிடம் சென்று பேராசிரியர் திட்டிய சம்பவத்தை சொல்லி இருக்கிறார். அந்த இன்ஸ்பெக்டர் நேரே வந்து பேராசிரியரை காவல் நிலயத்துக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கி இருக்கிறார். அருகில் இருந்த இன்னொரு பேராசிரியர் ஒருவர் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவரையும் தாக்கி இருவரையும் ரிமாண்ட் செய்திருக்கிறார்கள். மறுநாள் காலையில் விசயம் வெளியே தெரிந்து சேவியர் கல்லூரி மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்து இருக்கிறார்கள்.
மேலும் மாவட்ட ஆட்சியரிடம் ஊர்வலமாக முறையிட சென்றார்கள். சுலோச்சனா முதலியார் பாலம் வரும் போது காவல்துறை தடுத்து நிறுத்தினார்கள். மாணவர்கள் மீது கடுமையாய் லத்தி சார்ஜ் செய்ய துவங்கினார்கள். (ஜுலை 21 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் தாக்கப்பட்ட சம்பவம்ஞாபகம் வருகிறதா ? பாலத்தின் வலது புறத்தில் இருந்து ஆற்றில் குதித்த மாணவர்களில் லூர்துநாதன் என்பவன் ஆழமான தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்து போனான்.
இறந்த அவன் உடலை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கல்லூரி நோக்கி மாணவர்கள் வர, காவல் துறை கல்லூரி வாசலில்
இறந்த லூர்து நாதனின் உடலை கைப்பற்றி கொண்டு சென்று விட்டது. தமிழகம் எங்கும் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அன்றைய தி.மு.க. அரசு வழக்கம் போல ஒரு கமிஷனை போட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின் அவர் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் நடைபெற்றது 21.11.1972. தனது பேராசிரியர் தாக்கப்பட்டதற்காக தனது உயிரை இழந்த மாணவன் லூர்து நாதன் நினைவாக பாளை தெற்கு பஜாரில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களால் லூர்துநாதன் சிலை திறக்கப்பட்டது. ஐம்பது வருடங்கள் ஓடி விட்டன.. மாலை வேளைகளில் சிலை அருகே பானி பூரிக்களையும் , உளுந்த வடைகளையும் ஆமை வடைகளையும் ஆசையோடு தின்று கொண்டு இருக்கும் மாணவர்களையும்,
பெரியோர்களையும் பார்த்தபடி நான் சென்று இருக்கிறேன். தங்களுக்கு பின்னால் ஒரு மனிதனின் சிலை இருப்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும்.
அந்த மாணவன் எங்கோ சேலத்தில் இருந்து இங்கே படிக்க வந்து நம்ம ஊர் பேராசிரியர் சீனிவாசனுக்காக உயிர் தியாகம் செய்தவன் என்ற வரலாறு அவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை


