“என்னலே ராசுக்குட்டி அதுக்குள்ள பள்ளிகூடத்தில் இருந்து ஓடி வந்துட்ட”.
ஆச்சரியமாக கேட்டாள் ஆச்சி
“டீச்சர் அடிக்காவ ஆச்சி”.
“ஏம்முள்ள நீ எதுவும் சேட்டை பண்ணினியா?”
“நான் ஏன் சேட்டை பண்றேன்”.
“பொறவு எதுக்கு அடிச்சாவ”.
“நீ சொன்ன கதையை அப்படியே பிள்ளைய கிட்ட அடிச்சி வுட்டேன். எல்லா பிள்ளையளும் கேட்டு சிரிச்சுச்சா. டீச்சர் வந்து என்னலே சொன்னன்னு கேட்டு அடிச்சு தொவைச்சு புட்டாவ”.
“அடப்பாவி. இங்க பாரு அடிச்ச அடியில கொழுக்கட்டை மாறி வீங்கியிருக்கு. இரு நாளைக்கு காலையில நான் வந்து டீச்சர் கிட்டே பேசுறேன்”.
ஆச்சிக்கு பேரன் அடிப்பட்டதை தாங்க முடியவில்லை. எனவே கோபமாக இருந்தாள்.
“வேண்டாம். டீச்சர் கிட்டே பேச வேண்டாம்”.
ராசுக்குட்டி உறுதியாக சொன்னான்.
“ஏன்?”.
“நீ சொன்ன கதையை பொறவு டீச்சரும் கேட்பாவ. பொறவு அவுகளுக்கும் சொல்லணும். வாய் வலிக்கும்”.
“பொறவு நான் உனக்கு என்ன செய்ய. டீச்சர் கிட்ட போய் சண்டை போட வேண்டாமா?” ஆச்சி வெள்ளேந்தியாக கேட்டாள்.
“எனக்கு இன்னைக்கும் நல்ல கதையா சொல்லு . அது போதும். நான் இதை வச்சி பிள்ளைய கிட்ட ரீல் சுத்துவேன்” என்றான்.
“ஆச்சி எடு செருப்ப” என்று சொல்ல சிரித்தான்.
“அடிப்பட்டாலும் பராவாயில்லை. கதை தான் சொல்லணும் என் ராசாவுக்கு” என சிரித்தாள் ஆச்சி.
அன்று இரவு வந்தது.
இவர்களை முந்தி பௌர்ணமி நிலவு மொட்டை மாடியை ஆக்கிரமித்து விட்டது. ஆச்சியும் ராசுக்குட்டியோடு மொட்டை மாடிக்கு வந்தார்கள்.
“இன்னைக்கு நான் ராஜா ராணி கதையை சொல்லப்போறேன்”. என்றாள் ஆச்சி.
“சொல்லு ஆச்சி”. ஆர்வத்தோடு கேட்டான் ராசுக்குட்டி.
ஆச்சி சொல்ல ஆரம்பித்தாள்.
“தென்காசி பக்கம் சிற்றாறு ஓடி வருது. அந்த ஆறுதான் குற்றாலத்தில் அருவியா கொட்டுது. ஆடி மாசம் நாம குடும்பத்தோட போயி குளிச்சிட்டு வருவோம் உனக்கு நினவு இருக்கா. ஏழைகளுக்கு அந்த இடம் தான் ஊட்டி மாறி”.
“ஊட்டியா?”
“ஏன் இப்படி வாயை பிளக்க. அதெல்லாம் உனக்கு தெரியாது. நானும் பாத்தது கிடையாது .பெரியவங்க சொல்லுவாவ. நீ கதையை மட்டும் கேளு பிரிச்சு பிரிச்சு கேட்காத”. ஆச்சி முறைத்தாள்.
ஆச்சிக்கே தெரியலை. இருந்தாலும் கோபப்பட்டா அடுத்த கதையை சொல்ல மாட்டா. நமக்கெதுக்கு வம்பு என அமைதியாக இருந்தான் ராசுக்குட்டி. ஆச்சி கதை சொல்ல தொடங்கினாள்.
“இந்த சிற்றாறு ஓடி வருத இடத்துல ஆற்றை தன்னோட காதல் மனைவிக்காக ஒரு ரா-ஜா திருப்பி அந்த ஆத்துக்கு மேலே அரண்மனை கட்டியிருக்காவ”.
“என்ன ஆச்சி சொல்லுத?”.
“ஆமாம் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கு” ஆச்சி தன் காதில் கிடக்கும் பாம்படம் ஆட சிரித்தாள். கதையை தொடர்ந்தாள்.
“ஊத்துமலை ஜமீன்தார் ஒருத்தர் இருந்து இருக்காரு. அவரு பெயரு இருதாலய மருத்தப்பர். ராஜ பெரிய ஆளு. தமிழ் வளர்த்தவரு. தனக்கு எதுவும் வேணுமுன்னா அதை உடனே வாங்கணுமுன்னு துடியா துடிப்பாரு. இள வயசுல துருதுருன்னு இருப்பாரு. அந்த காலத்தில ராஜா திருமணம் முடிக்கனுமுன்னா. தான் போய் பொண்ணு கேட்க வேண்டாம். தன்னோட வாளை அனுப்பி விடுவாவ. சேவக்காரவிய அந்த வாளை ராஜாவுக்கு பிடிச்ச பொண்ணு கிட்டே கொண்டு போய் நீட்டுவாவ. அவுக உடனே அந்த வாளுக்கு மாலை போட்டு விட்டுறுவாவ. அதுக்கப்புறம் அந்த பெண்ணை அரண்மனைக்கு வரவழைச்சு ராணியா வாழ வைப்பாவ. இப்படித்தான் ராஜமாருக கல்யாணம் முடிப்பாவ”.
“அப்படியா?” ராசுக்குட்டிக்கு இது புதுசா இருந்துச்சு.
“அப்படித்தான். நம்ம ராஜாவுக்கும் காதல் வந்துட்டு. சாதாரணமாகவே கேட்ட பொருளை வேண்டும் என்று அடம் பிடிச்சு வாங்கும் ராஜா, காதலியை மட்டும் விருப்பப்பட்டு கேட்டு பின் வேண்டாமுன்னு விட்டு விடுவாரா?”
“மீனாட்சி சுந்தர நாச்சியார். இவர் தான் மன்னர் மருதப்பரின் காதல் மனைவி. ராணியின் பிறந்த ஊர் செல்வச்செழிப்பான குருந்தன்மொழி. இவரின் தந்தை பெயர் மருதப்பத் தேவர். தாயார் பெயர் தங்கம்மாள். பெற்றோர்கள் நாச்சியாரை நல்ல குணமுள்ள பெண்ணா வளர்த்து வந்தாவ. அழகு நிறைஞ்ச பெண். இவுகளுக்கு அறிவும், அழகும் அதிகம் தான்”.
“ஒரு நாள் வரி வசூல் செய்ய மன்னர் குருந்தன்மொழிக்கு போயிருக்காவ. அங்கே மீனாட்சி சுந்தரநாச்சியாரை பாத்து இருக்காவ. அவுக அழகில மயங்கி போயிட்டாவ ராஜா. உடனே அவுகளை திருமணம் செய்ய நினைச்சு இருக்காவ”.
“ஜமீன்தார் நினைச்சா நடக்காம இருக்குமா என்ன? . ஆனாலும் இந்த திருமணத்துக்கு மீனாட்சி நாச்சியாரின் சொந்தங்கள் சம்மதம் தெரிவிச்சிட்டாவ. ஆனா மருதப்பரின் தாயார் பெரிய ராணி மட்டும் எதிர்ப்பு தெரிவிச்சாவ. அவுக சொக்கம்பட்டி ஜமீனை சேந்தவிய அவுகள போலவே தன் மகனுக்கும் ஒரு ஜமீன்தார் வீட்டில் இருந்து தான் பெண் எடுத்து வர வேண்டும் என பிடிவாதமாக இருந்தாவ. ஆனால், மகன் மிகவும் பிடிவாதமாக எனக்கு இந்தப் பெண் தான் வேணும் திட்டவட்டமாக சொல்லிப்புட்டாவ ராஜா. பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுன்னு சொல்லுவாவளே. அதுபோல தான் கடைசியில மகனின் விருப்பத்துக்காக தாயார் தனது மனதை மாற்றிக்கொண்டாவ”.
உடனே ராஜா தன்னோட சேவகர்கள் கிட்ட தன்னோட வாளை கொடுத்து விட்டு ருக்காவ. சேவகர்கள் குருந்தன்மொழி போய் நாச்சியார்கிட்ட வாளை காட்டினாவ. ஆனால அதை கண்டு கொள்ளவில்லை நாச்சியார். திரும்ப வந்து நடந்த விசயத்தை ராஜாகிட்ட சொன்னாவ சேவகர்கள் உடனே ராஜாவே நாச்சியாரை பார்க்க ஓடிப்போனாவ”.
“எங்கிட்ட பொன்னு இருக்கு பொருள் இருக்கு. காலாட் படை குதிரை படை யானைப்படை இருக்கு. ஆட்சி இருக்கு. சொன்ன சொல்ல கேட்ட ஆயிரம் வேலைக்காரங்க இருக்காங்க என்னை ஏன் கட்டமாட்டேன்கிறன்னு கேள்வி கேட்டு இருககாவ”.
“அதுக்குநாச்சியார். நான் இருக்கும் .ஊரு குருந்தன்மொழி. மிகவும் செழிப்பான ஊரு. சிற்றாரு பாசனம். இந்த இடத்தில் எப்போதுமே விவசாயம் இருக்கும். எப்போது குளிச்சியா இருக்கும் . ஆனால், ஊத்துமலை அப்படி அல்ல. வானம் பார்த்த பூமி. அங்க வந்து நான் வறட்சியில வாட முடியாது. எனவே அந்த பூமிக்கு நான் ராணியாகச் செல்ல முடியாதுன்னு திட்டவட்டமாக மறுத்து விட்டாவ”.
“மருதப்பர் ராஜா அப்படியே இடிஞ்சு போயிட்டாவ”.
“எனக்கு நீ தான் ராணியா வரணும். அதுக்காக என்ன வேணுமுன்னாலும் செய்ய நான் தயாரா இருக்கேன்னு சொன்னாவ”
“உடனே நாச்சியார். அப்படின்னா எனக்குக் குளிர்ச்சியான இடத்தில அரண்மனை கட்டணும். அப்படி அரண்மனை கட்டினா நான் உம்மை கட்டிக்கிறேன்னு கரரா சொல்லி புட்டாவ”.
“உடனே ராஜா அரண்மனைக்கு வந்தாவ என்ன செய்யலாமுன்னு யோசிச்சாவ. சிற்றாற்றில் இருந்து ஒரு அணையை கட்டினாவ. வீராணம் கால்வாய் வெட்டினாவ. கால்வாய் இருகரையிலும் அரண்மனையை கட்டினாவ. ஒருபக்கம் அரண்மனை மற்றொரு பக்கம் தர்பார் மண்டபம். இரண்டு பக்கம் போயிட்டு வர கால்வாய் மேலே பாலம் போட்டாவ”.
“இரண்டு அரண்மனைக்கும் இடையை போக்குவரத்தை ஏற்படுத்தினாவ. அந்த ஊர் முழுவதும் மரங்களை நட்டாவ. கோயில் கட்டினாவ. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் வகையில அரண்மனையை ரொம்ப சிறப்பா ஏற்படுத்தினாவ. இந்த இடம் கேரளா மாறி குளுகுளுன்னு இருக்கிறதால ஊருக்கு வீரகேரளம் புதூருன்னு பேரும் வைச்சாவ”.
“ஊத்துமலையில் இருந்து அரண்மனை வீரகேரளம்புதூருக்கு மாறியது. ராணி ரொம்ப சந்தோசபட்டாவ. ஒரு காலத்தில மும்தாஜ்க்காக தாஜ்மகால் கட்டிய ஷாஜகானைப்போல் மருதப்பர் ராணிக்காக இந்த அரண்மனையை உருவாக்கிட்டாரு. நாச்சியார், திருமணத்துக்கு சம்மதம் தெரிவிச்சிட்டாவ”
“வீரகேரளம்புதூர் அரண்மணையில் வைச்சி ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாருக்கும் மன்னர் இருதாலய மருதப்பர் தேவருக்கும் 1864ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி கல்யாணம் கோலாகலமாக நடதுச்சு. இந்த அரண்மனையில் தான் இருவரும் பல ஆண்டுகள் வாழ்ந்தாவ”.
ஆச்சி மூச்சி விட்டாள். ராசுக்குட்டிக்கு வித்தியாசமாக இருந்தது.
“ஆகா ஒரு பெண்ணுக்காக மிகப்பெரிய அரண்மனையையே கட்டியிருக்காவலே நல்ல மனுசனா இருக்காவலே. அப்புறம் எப்படி வாழ்ந்தவ ஆச்சி”. ஆர்வமாக கேட்டான்.
“இரண்டு பேரும் நல்லாத்தான் வாழ்ந்தாவ. ஆனா இவுகளுக்கு குழந்தை இல்லை. தத்து குழந்தை எடுத்து வளர்த்தாவ. அந்த குழந்தையும் நோய் வாய்பட்டு இறந்து போச்சு”. சோகமா சொன்னாள் ஆச்சி.
“அடப்பாவமே”. உச் கொட்டினான் ராசுக்குட்டி.
“கடைசியல மருத்தப்பர் நோய் வாய்ப்பட்டாவ”.
“அடப்பாவமே. அப்புறம்?”.
“12.09.1891 ல் மருதப்ப ராஜாவும் இறந்திட்டடாவ”.
“அடாடா. அய்யோ காதல் மனைவி கடைசியில என்ன செஞ்சாவ”. ராசுககுட்டி அதிர்ச்சி அடைந்தான்.
“எல்லாருமே கலங்கி போயிட்டாவ. ராணி செய்வதறியாது தவிஞ்சாவ”.
சோகத்தில் ஒரு நிமிடம் அப்படியே யோசித்த ஆச்சி தொடர்ந்து பேசினாள்.
“அரண்மனையில வாரிசு இல்லை. நில புலனை கவனிக்கணும். ராஜ்ஜியம் ஆளானும் ராஜா இல்லாம ஆடி போயிட்டாவ ராணி”.
“பொறவு சாதரண காரியமா?”
“என்ன செய்யலாமுன்னு யோசனை செஞ்சாவ. எப்படியும் அரசாட்சி நடக்கணும். அரண்மனை தொய்வு இல்லாம நடக்கணும். தமிழ் பணி நடக்கணும். தமிழ் அறிஞர்களை போற்றி புகழனும். ஆன்மிக பணி நடக்கணும். ஊருல உள்ள நவநீத சாமி கோயிலு நிர்வாகம் பாக்கணும். சங்கரன் கோயில் ஆடி தபசு நிகழ்ச்சிக்கு பெண் வீட்டு காரங்களா தட்டு தப்பூலம் தூக்கி கிட்டு சீர் கொண்டு போகணும். பல ஊரு அடங்கின பெரிய ஜமீன். நிர்வாகம் பாக்கிறது சாதரண விஜயமா”.
“ராணி அறிவு பூர்வமாக செயல்பட்டாவ. இருதாலய மருத்தப்ப மன்னரைப் போலவே மாவு பொம்மை ஒன்னை தயார் செஞ்சாவ. அவர் உயிரோடு இருப்பது போலவே அவருக்கு சட்டை துணி மணி போட்டு வைச்சாவ. அந்த பொம்¬ம் அப்படியே அச்சு அசல் ராஜ உயிரோடு இருப்பது போலவே இருந்துச்சு. அந்த பொம்மையை கொண்டு வந்து ராஜ தர்பாருல வச்சாவ. அந்த மாவு பொம்மை காலடியைத் தொட்டு தினமும் தனது வாழ்க்கையை நடத்த ஆரம்பிச்சாவ. அரண்மனையில இருந்து கணக்கு வழக்குகளை பார்த்து முடிச்சாவ”.
“ ஆன ராணி ராஜா செத்து போயிட்டாவன்னே நினைக்கலை. அவுக உயிரோட இருந்தே தர்பார் நடத்துறதா நினைச்சாவ”
“ஒரு காலத்தில ராணியும் இந்த மண்ணை விட்டு போயிட்டாவ. ஆனாலும் 132 வருசமா இந்த மாவு பொம்மை வீரகேளரம் புதூர் அரண்மனையில கம்பீரமாக இன்னைக்கு வரைக்கும் இருக்கு அப்படியா ஆச்சி”.
“ஆமாம். அந்த மாவு பொம்மை தற்போதும் வீரகேரளம்புதூரில் உள்ள அரண்மனையில் தற்போதைய ஜமீன்தார் வாரிசுதாரவுக பத்திரமாக வைச்சி பாதுகாத்து வராவ”
“அப்படியா? ஆச்சி ஆச்சி. நாம சுரண்டைக்கு என்னைக்காவது போனா அந்த அரண்மனைக்கு என்னை கூட்டிட்டு போவியா அந்த மாவு பொம்மையை எனக்கு காட்டுவியா?” என கேள்வி கேட்டான்.
ஆச்சி சிரித்தாள். “நிச்சயம் உன்னை கூட்டிட்டு போறேன்” என்றாள்.
“ராணிக்காக ராஜா கட்டிய அரண்மனை பெரிசா, இல்லை தனது காதல கணவருக்காக ராணி கட்டிய மாவு பொம்மை பெரிசா என தோன்றினாலும். சுமார் 132 வருடம் மாவு பொம்மை ஒன்று கெட்டு போகாம இருக்குன்னா அவுக காதல் இன்னும் வாழ்ந்து கிட்டுத்தானே இருக்கு”
ஆச்சி சொன்னது எதுவும் ராசுக்குட்டிக்கு புரியவில்லை. ஆனால் அவள் சொன்ன காவிய காதல் கதை மனதை விட்டு அகல மறுத்தது.
(தொடர்ந்து ஆச்சி கதை சொல்லுவாள்)


