தொ.ப எனும் ஆளுமையோடு எழுத்தாளராக நாமும்(முத்தாலங்குறிச்சி காமராசு) பயணித்தோம் என்பது எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.
காவ்யா பதிப்பகம் சார்பில் நெல்லையில் 10 நூல்கள் வெளியிடு 05.03.2011 அன்று நடந்தது.அதில் என்னுடைய “ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்”, “நெல்லை வைணவத் தலங்கள்”, “நெல்லை சைவக் கோயில்கள்”, “சீவலப்பேரி சுடலை”, “நெல்லை பெண் தெய்வங்கள்” ஆகிய நூல்கள் வெளியிட்டு விழா நடந்தது. அந்த நூல் வெளியிட்டு விழாவிற்கு தலைமை தாங்க சிங்கம் பட்டி ஜமீன்தார் எங்களது மரியாதைக்குரிய முருகதாஸ் தீர்த்தபதி ராஜா வந்திருந்தார்கள். இந்த நிகழ்வில் மிகப்பெரிய ஆளுமையான சாகித்ய அகடாமி விருது பெற்ற தி.க.சி அய்யா, பேரறிஞர் ச.வே.சு அய்யா, மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தமிழ்த்துறை மேனாள் தலைவர் முனைவர் அழகேசன் ஆகியோர் வருகை தந்திருந்தார்கள். இந்த நாளில் என்னுடைய வைணவத்தலங்கள் நூலை பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்ற வந்திருந்தார்கள். அவரை அழைக்க நாங்கள் காரில் சென்று வர ஏற்பாடு செய்திருந்தோம். நிகழ்ச்சி பாளையங்கோட்டை நூலகத்தில் தான் நூல் வெளியிட்டு விழா நடந்தது. இவர் தெற்கு பஜாரில் அவரது வீட்டில் இருந்து தான் வரவேண்டும். ஆனால் நாங்கள் சென்று அவரை அழைத்து வர வேண்டும் என்று அவர் நினைக்க வில்லை. மற்றொரு நண்பரின் இருசக்கர வாகனத்தில் நூலகம் வந்து விட்டார்.
என் நூலை வெளியிட்டு தொ.ப பேசும் போது, முத்தாலங்குறிச்சி காமராசுவின் எழுத்து மேலை நாட்டு எழுத்தாளர்களின் எழுத்து போலவே உள்ளது. அவர்கள்தான் களத்தில் சென்று அங்கே என்ன உள்ளது என்பதை சொல்லும் வழக்கத்தினை வைத்து இருப்பார்கள். ஆகவே தான் காமராசுவும் எழுதுவது ஆன்மிக மாக இருந்தாலும் அந்த கோயிலில் அவர் செல்லும் போது அங்கிருந்த மக்களிடம் என்ன கண்டார் என்பதை மிகத்தெளிவாக குறிப் பிட்டுள்ளார்.
பிற்காலத்தில் மிகப்பெரிய ஆளுமையாக இவர் வருவார் என பேசினார். எனக்கு மிக சந்தோசமாக இருந்தது.
அதன் பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொ.ப அய்யாவை நான் சந்திப்பேன். நிறைய விசயங்கள் பேசுவோம். ஆதிச்சநல்லூர் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். 2004 ல் அகழாய்வு நடந்த போது அவர் அடிக்கடி ஆதிச்சநல்லூர் சென்று வந்துள்ளார்.
எனவே அவர் ஆதிச்சநல்லூரும் தமிழரின் தென்மையும் என்ற தலைப்பில் சில சமயம் என்னிடம் உரையாடி உள்ளார்.
தெற்கு பஜாரில் உள்ள கடை ஒன்றில் மாலை வேளைகளில் அவர் அவரது சிஷ்யர்களோடு வந்து இருப்பார். அப்போது அவரை சந்தித்து பேசியுள்ளேன்.
செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயில் தல வரலாறு எழுத எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை எனக்கு மும்பை அன்னதான அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.
சுமார் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடம். இந்த இடத்தில்தான் நான் எ-ழுதிய செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா வரலாறு நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலை 13.04.2014 அன்று அய்யா முல்லை முருகன் வெளியிட, தொ.பா அய்யா பெற்றுக்கொண்டார்.
என் வாழ்வில் மறக்க முடியாது நாள். ஆனாலும் அந்த சந்தோசம் நீண்ட நேரம் நீடிக்க வில்லை. புத்தகத்தினை வெளியிட்டு விட்டு, அன்னதான பந்தலில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு கோயிலுக்குள் தரிசனம் செய்ய செல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தோம்.
ஆனால் முல்லை முருகன் அய்யா எதிர்பாரத விதமாக மயங்கி விழுந்து விட்டார். அவரை காரில் தூக்கி க்கொண்டு ஆஸ்பத்திரி வந்தோம். என் தோளில்தான் முல்லை முருகன்அய்யா சாய்ந்திருந்தார். அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் மருத்துவரை அழைத்து அவரை காட்டியபோது அவர் இறந்து விட்டார் என்று கூறினார்கள்.
எங்கள் சந்தோசம் எல்லாம் தவிடு பொடியாக மாறிவிட்டது. தொ.ப அய்யா ஆடியே போய் விட்டார்கள். அவரது உடலை அவரது உறவினர்களிடம் கொண்டு வந்து ஒப்படைக்கும் போதும், அவர் இறந்து விட்டார் என்ற தகவலை அவரது துணைவியாரிடம் கூறும்போதும் நாங்களே கதறி அழுது விட்டோம்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தொ.ப அய்யாவும் அமைதியாக இருந்து விட்டார்கள்.
முல்லை முருகன் என்ற நண்பரை தன் கண் முன்னே இழந்த சோகம் அவரை மிகவும் வாட்டி வதைத்தது.
என்னை பொறுத்தவரை முல்லை முருகன்அய்யா என்னை காவ்யா பதிப்பக உரிமையாளர் பேராசிரியர் சண்முக சுந்தரம் அய்யாவிடம் அறிமுகம் செய்தவர். அதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய களப்பணியாளர் இவர், அவருக்கு நீங்கள் நிறைய நூலை வெளியிட்டு வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்று கூறினார்.
அவரிடம் காவ்யா அய்யா கொடுத்த வாக்கின் படி இதுவரை எனது 40க்கு மேற்பட்ட நூலை காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள் ளது. தொடர்ந்து வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
காலங்கள் கடந்தது.
சர்க்கரை நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு தெற்கு பஜார் வீட்டு மாடியில் ஓய்வாக இருந்த தொ.ப அய்யாவை நானும் காவ்யா சண்முகசுந்தரம் அய்யாவும் பார்க்க சென்றோம். நிறைய பேசினார். தன் உடல் நலம் கூட அவருக்கு பெரிய பாதிப்பாக தெரியவில்லை. ஆனால் இலக்கியத்தில் உள்ள ஈடுபாடு தான் மிக அதிகமாக இருந்தது.
நண்பர்களை பற்றி நிறைய பேசினார்.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி எனக்கு தமிழ் ரத்னா சிறப்பு விருதை சென்னையில் 22.10.2019 அன்று வழங்கியது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கரங்களால் பெற்றேன். அதே மேடையில் தமிழ் ரத்னா இலக்கிய விருது தொ.ப அய்யாவுக்கு வழங்கப்பட்டது. அதை அவர் நேரில் வந்து பெற இயலவில்லை. எனவே அவரது மகன் மணி வந்து அந்த விருதை பெற்றார். அவர் விருதுபெற்ற அதே மேடையில் நானும் விருது பெற்றேன் என்பது எனக்கு பெருமை.
அய்யா கூறிய படியே எனக்கு சிறப்பு விருதுகளும் பரிசுகளும் கிடைக்க ஆரம்பித்து விட்டது என நினைத்தேன். அய்யாவின் ஆசியை நினைத்து சந்தோசப்பட்டேன். தற்போது அய்யா நம்மிடம் இல்லை. ஆனாலும் அவரது நினைவலைகள் நம்மை சுற்றியே சுழலுகிறது.
அடுத்து முன்னீர் பள்ளத்தில் வாழ்ந்த மேலும் ஒரு ஆளுமையை பற்றி காணலாம்.
(நதி வற்றாமல் ஓடும்)


