ரிலையன்ஸ் அறக்கட்டளை தென்காசி மாவட்டத்தில் பண்ணைப்பள்ளி திட்டத்தின் மூலம் மக்காச்சோளம் மற்றும் உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்கு நிலத்தை பண்படுத்தல் முதல் அறுவடை வரை உள்ள தொழில்நுட்பங்களை பல்வேறு விழிப்புணர்வு கருவிகள் மூலம் தெரிவித்துவருகிறது. தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில் உள்ள சிவகாமியாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் கால்நடை வளர்ப்பையும் முக்கிய வாழ்வாதாரமாகவும் செய்து வருகிறார்கள். விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்திய பொது நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு தேவைப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. நோய் தாக்கம் அடிக்கடி ஏற்படுவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆடியோ கான்பிரான்ஸ் முலம் கால்நடை நலம் மற்றும் நோய் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குருவிகுளம் கால்நடை மருந்தக கால்நடை மருத்துவர் நிஷாந்த் குமார் அவர்கள் கறவை மாடுகள், வெள்ளாடுகள், செம்மரி ஆடுகள், மற்றும் கோழிகளை கோடைகாலங்களில் தாக்கும் நோய்கள் குறித்தும் மற்றும் அவைகளை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும் குடற்புழு நீக்க மருந்து கொடுப்பதின் அவசியம், மடிவீக்க நோயிலிருந்து கறவை மாடுகளை பாதுகாப்பது, உண்ணிகளை கட்டுப்படுத்துதல், உணவு மேலாண்மை, தடுப்பு ஊசி போடுவதின் அவசியம் குறித்து விளக்கம் அளித்தார். இதில் சுமார் 25 கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


