தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து விரைந்து தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இந்தக் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த 32 மனுதாரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரடியாகச் சந்தித்துத் தங்கள் புகார்களைத் தெரிவித்தனர். நிலத் தகராறு, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் தொடர்பான மனுக்கள் எஸ்பி அவர்களிடம் வழங்கப்பட்டன.
பொதுமக்களின் புகார்களைப் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன், அந்த மனுக்கள் மீது உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டத்திற்குட்பட்ட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்


