தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமாகவும் தாலுகா தலைநகராகவும் உள்ள ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்லாமல் பல அரசு பேருந்துகள் புதுக்குடி வழியாகவே செல்வதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், கடந்த டிசம்பர் மாதம் போக்குவரத்து துறையினர் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்லாமல் பேருந்துகள் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
ஆனால், மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையை மீறி, இரவு நேரங்களில் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்லாமல் புதுக்குடி வழியாகவே பேருந்துகள் செல்வதும் பொதுமக்கள் அதற்கு எதிராக போராடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை இரவு 9:30 மணி அளவில் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாது என பயணிகளிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து, அந்த தனியார் பேருந்து புதுக்குடிக்கு வந்தபோது அதனை சிறைப்பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லும்படி தெரிவித்தனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் மற்ற வாகனங்களை அனுப்பி வைத்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்து செல்ல முயன்ற தனியார் பேருந்தை ஊருக்குள் செல்லாமல் செல்லக்கூடாது என எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து தனியார் பேருந்து ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் சென்று வந்தது. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்வதை உறுதிப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


