நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர். சிறப்பு முகாமை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த டிசம்பரில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து, தகுதியான வாக்காளர்களையும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களையும் சேர்க்க, டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
அதை தொடர்ந்து, இம் மாதம் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடந்தன. நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாம்கள் வாயிலாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏராளமானோர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று 04.01.2026 சிறப்பு தீவிர திருத்த பணி -2026 உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணைகளின் காலமான, (19-12-2025 முதல் 18-01-2026 வரை) தகுதியுடைய வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டது. இச்சிறப்பு முகாமை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.


