
அமாவாசை நாட்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆடி அமாவாசை. இந்நாளில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் பாவங்களை அனைத்தும் நீங்கி முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். எனவே முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க மக்கள் நீர் நிலைகளில் கூடி வருகிறார்கள். குறிப்பாக திருச்செந்தூர், தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்பட பல்வேறு நீர்நிலைகளில் மக்கள் தர்பணம் கொடுத்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு தெட்சன காசி என்றழைக்கப்படுகிறது. இங்கு நவகைலாயங்களில் நடுகைலாயமான குருஸ்தலமாக திகழும் கைலாசநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முன்பு வடக்கிருந்து தெற்காக தாமிரபரணி பாய்கிறது. இவ்விடத்தில் தர்பணம் செய்தால் காசிக்கு சென்று தர்பணம் செய்தற்கு சமம் என கருதப்படுகிறது. எனவே இவ்விடத்தில் ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் ஆயிரக்கணக்காக திரண்டு தர்பணம் செய்கிறார்கள்.
இதற்காக இன்று அதிகாலை சிவகாமி சமேத கைலாசநாதர் ஆலயம் நடைதிறக்கப்பட்டது. சிவன் , சிவகாமி அம்மாள் உள்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. அதன் பின் தாமிரபரணி ஆற்றில் அதிகாலை 5 மணி முதல் புனித நீராட பக்தர்கள் திரண்டனர். ஆயிரக்கணக்கானபக்தர்கள் ஒரே நேரத்தில் தாமிரபரணியில் நீராடி தர்ப்பணம்கொடுத்தனர். தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று கைலாச நாதரை வணங்கி நின்றனர்.
இதே போல் கருங்குளம் தாமிரபரணி ஆற்றிலும் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர். இங்கு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டிருந்தனர்.


