முத்துராமன் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1960-1970களில் முன்னணி நடிகராக இருந்தார். நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம் நடத்தி வந்த “சேவா ஸ்டேஜ்” நாடகங்களில் நடித்து வந்தார். நவரச திலகம் எனவும் அழைக்கப்பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.அக்காலத்திய முன்னணி இயக்குனர்களான ஸ்ரீதர், கே. பாலச்சந்தர் ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றில் இவர் நடித்தார்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தில் ஒக்கநாடு என்ற ஊரில் ராதாகிருஷ்ணன் ஓந்திரியர் – ரத்னாவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக 1929-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி பிறந்தார். அங்குள்ள பள்ளியில்தான் 5 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார். முத்துராமனுக்கு பூர்வீகத்தில் 6 ஏக்கர் நன்செய் நிலமும், ஒரு வீடும் சொந்தமாக இருந்திருக்கிறது. முத்துராமனுடைய தந்தையார் ஒரு வழக்கறிஞர். இவருடைய மாமா ஒரு காவல் துறை அதிகாரி. குடும்பத்தில் யாருக்கும் நாடக அல்லது திரைத்தொழிலில் தொடர்பு கிடையாது. இருப்பினும் முத்துராமனுக்கு நுண்கலை மற்றும் திரைத்துறையில் ஆர்வம் இருந்திருக்கிறது. முத்துராமன் தனது குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரில் முதலில் ஒரு அரசு ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் நாடக நடிகராகத்தான் தன் திரைவழிப் பயணத்தை தொடங்கினார். எஸ். எஸ். ராஜேந்திரனுடன் இணைந்து, எஸ். எஸ். ஆர் நாடக மன்றத்தில் தொடர்ந்து பல நாடங்களில் நடித்தார். மகாகவி பாரதியாரின் கவிதைவரி நாடகத்தில் நடித்ததன் மூலம் எல்லோரிடத்திலும் தனித்துவமான கவனம் பெற்றார்.மிகவும் தாமதமாகவே அவர் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். இவர் மனைவி சுலோசனா மற்றும் மகன்கள் கணேஷ் மற்றும் நடிகர் கார்த்திக் ஆவார்கள். நடிகர் கௌதம் கார்த்திக் இவருடைய பேரன் ஆவார்.
திரையுலக வாழ்க்கை
முன்னணிக் கதாநாயகனாக பல படங்களில் நடித்தபோதும், தன்னை முன்னிறுத்தாத, கதாநாயகியை முன்னிறுத்தும் பல படங்களில் (கே. ஆர். விஜயா, சுஜாதா ஆகியோருடன்) நடித்துள்ளார். மேலும், அப்போதைய முன்னணி நட்சத்திரங்களாக இருந்த எம்.ஜி.ஆர் (‘என் அண்ணன்’, ‘கண்ணன் என் காதலன்’ போன்றவை) மற்றும் சிவாஜி கணேசன் (‘பார் மகளே பார்’, ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘சிவந்த மண்’ போன்றவை) ஆகியோருடன் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தனது காலத்தில் அல்லது தனக்குப்பின் அறிமுகமான ஜெய்சங்கர் (கனிமுத்துப் பாப்பா), ரவிச்சந்திரன் (‘காதலிக்க நேரமில்லை’) ஏ. வி. எம். ராஜன் (‘பதிலுக்குப் பதில்’, ‘கொடிமலர்’) ஆகியோருடன் இரண்டாவது நாயகனாகவும் நடித்துள்ளார். தனது திரைப்படங்கள் பலவற்றிலும் மிகைப்படுத்தாத தன்னம்பிக்கை மிகுந்த நடிப்பிற்காகப் பெயர் பெற்றார்.
இவரது இறுதிப்படம் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த போக்கிரி ராஜாவாகும். இதில் வில்லன் வேடம் ஏற்றிருந்த முத்துராமன், ஒரு வெளிப்புறப்படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அச்சமயமே, இவரது மகனான கார்த்திக் கதாநாயகனாக பாரதிராஜா வின் புகழ்பெற்ற அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகவாகவிருந்தார்.


