தூத்துக்குடியில் அருகே நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த 6 மீனவர்கள் மற்றொரு மீன்பிடி படகில் சென்ற மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து அந்தோணி ராஜ் என்பவரது விசைப்படகில் ஆழ்கடலில் மீன் பிடிக்க கடந்த 1ஆம் தேதி 6 மீனவர்கள் சென்றுள்ளனர். இவர்கள் திருச்செந்தூருக்கு கிழக்கே 30 கடல் மைல் தொலைவில் நடுக்கடல் பகுதியில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென படகில் ஏற்பட்ட பழுது காரணமாக கடல் நீர் உள்ளே புகுந்து விசைப்படகு மூழ்கத் துவங்கியுள்ளது.
இதை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனவர்களை தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீட்டு தங்களது விசைப் படகில் ஏற்றி மீட்டு வந்துள்ளனர். மேலும், வலைகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பத்திரமாக தங்கள் படகில் ஏற்றி உதவி உள்ளனர். இதைத் தொடர்ந்து மூழ்கிய படகை கயிறு மூலம் கட்டி கரைக்கு பத்திரமாக இழுத்து வரும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.


