
தருவை கிராமத்துக்கு சாய்பாபா வந்த வரலாற்றை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் குரோம்பேட்டையில் எழுந்தருளியிருந்த தாசப்பா சுவாமியிடம் இசக்கியை அவருடைய பெரியப்பா அழைத்துச் சென்றார். இசக்கியைப் பார்த்த அளவில் இவருக்கு குருவின் திருவருள் இருக்கிறது என்று தாசப்பா சுவாமிகள் கூறினார்.
அந்த சமயத்தில் இசக்கிக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவருக்கு தெய்வ கடாட்சம் இருந்தது சாய்பாபா கோயில் கட்டியபிறகே புரிந்தது.
பிற்காலத்தில் அருணாச்சல தல சித்தர் கதிர்வேலு அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இசக்கிக்குக் கிடைத்தது. திருமங்கலம் ரவி பாபா வை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தொடர்ந்து மகான்களின் தொடர்பும், ஸ்ரீசீரடி சாய்பாபாவின் அனுக்கிரகமும் இசக்கி அவர்களின் வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருந்தது. அப்போது சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டது. வீடு கட்ட தேவையான வீட்டு மனை நினைத்தபடி முதலில் அமையவில்லை. இரண்டாம் முறை முயன்றபோது சரியான இடத்தில் அமைந்தது. தருவை அருகே உள்ள கே.டி.சி. நகரில் இசக்கியின் சகோதரர்களுக்கு இடங்கள் கிடைத்தது.இந்த இடங்கள் ஒரே இடத்தில் அமைந்தது.
இதற்கிடையில் இசக்கி குடும்பத்தினர் வீடு கட்டுவதற்குக் கொஞ்சம் பணம் சேகரித்தனர். சுந்தரம் பைனான்சில் வீட்டுக் கடனுக்கு இசக்கி விண்ணப்பம் செய்தார். ஆனால் உரிய நேரத்தில் அதற்கான பணம் கிடைக்கவில்லை. இசக்கி பாபாவிடம் மனமுருக வேண்டி நின்றார். வீடு என்பது மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. வீடுகட்ட கடன் கிடைப்பது மிகவும் அபூர்வ மாக உள்ளதே பாபா. அருள் புரியுங்கள் என வேண்டினார். ஆனால் சுந்தரம் பைனான்ஸ் கடன் தள்ளிக்கொண்டே போனது.
இதனால் மனம் தளராமல் ஸ்டேட் வங்கியில் கடன் வேண்டி மனு செய்தார். என்ன ஆச்சரியம் உடனே கடன் கிடைத்து விட்டது. குடும்பத்தினர் அனைவரும் சந்தோசம் அடைந்தனர். ஏன் என்றால் சுந்தரம் பைனான்சில் வட்டி அதிகம். ஆனால் பாரத ஸ்டேட் வட்டி வட்டி குறைவு. இதுவே பாபாவின் அருள்தான். எனவே தான் சுந்தரம் பைனான்ஸ் கடன் தருவதற்குத் தாமதப்படுத்தி தற்போது பாரத ஸ்டேட் வங்கி மூலம் கடன் தந்து இசக்கி குடும்பத்தினரின் பாரத்தினை குறைத்து விட்டார்.
சுமார் 12 லட்சம் கடன் வாங்கி வீடு கட்டி குடியேறினார்கள். கடன் வெகு விரைவில் தீர்ந்தது. இவையெல்லாம் பாபாவின் பேரருள் என்பதை இசக்கி அறிந்து கொண்டார். இதனால் தினமும் பாபாவை நினைக்காத நாளே இல்லை. தனது மனதுக்குள் பாபா ஏதோ ஒரு செயலை செய் எனத் தூண்டுவது புரிந்தது. இந்த கலியுகத்தில் மனம்நொந்து புண்படும் பக்தர்களைப் பண்படுத்த பாபாவின் கோயில்கள் பல இடங்களில் உருவாக வேண்டும். இந்த சூழல்தான் பாபாவுக்குக் கோயில் எழுப்ப வேண்டும் என்ற உணர்வு இசக்கிக்கு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
அது முடியுமா?. சாதாரணமாக இவ்வூரில் வாழும் இசக்கி அவர்களால் பாபாவுக்குக் கோயில் கட்ட இயலுமா?. அதற்காகவும் பாபா அருள் புரிந்தார். இந்த சமயம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தருவையைச் சொந்த ஊராகக் கொண்டவர். அவரின் தொடர்பு இசக்கிக்குக் கிடைத்தது.
கிருஷ்ண மூர்த்தி அய்யாவுக்கு இ-அஞ்சல் மூலம் தன்னுடைய திருக்கோவில் கட்டும் எண்ணங்களை இசக்கி தெரிவித்தார். அவரிடமிருந்து உடனே பதில் வந்தது. “உங்கள் வீட்டுக்கு அருகில் இன்னும் இரண்டு வீடுகள் அமைந்த பிறகு பிள்ளையார் விக்கிரகம் வைத்து முதலில் பூஜை செய்யுங்கள்” என்று அவர் ஆலோசனை வழங்கினார்.
அவர் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட இசக்கி வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.
சரி.விநாயகர் எப்படி வைக்கவேண்டும். முதலில் 2க்கு 2, 3க்கு 3 அடி அளவுள்ள விநாயகரை வைக்க வேண்டும் என இசக்கி குடும்பத்தினர் விரும்பினார்கள்.
விநாயகர் சிலை வேண்டும் என்றால் சிற்பியிடம் செல்லவேண்டும். இதற்காகக் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி சிற்ப கூட்டத்திற்குச் செல்லவேண்டும் என்று திட்டமிட்டனர். இதற்கு முன்பு மயிலாடிக்கு இசக்கியோ அல்லது இசக்கியின் குடும்பத்தாரோ செல்லவில்லை.
ஆனால் இவர்களே சொல்லி அளவெடுத்துச் செய்த படியாகவே விநாயகர் விக்கிரகம் மயிலாடியில் இருந்தது. அவர்கள் எதிர்பார்த்த படியே விநாயகர் கிடைத்தது. இசக்கியின் அப்பா வாங்கிய இடத்தில் தருவை கே.டி.சி நகரில் 10க்கு 10 ல் விநாயகர் பிரதிட்சை செய்யப்பட்டார். இவருக்குச் செல்வ பலபாக்கிய விநாயகர் என்று பெயரிட்டனர்.
கும்பாபிசேகம் நாள் குறிக்கப்பட்டது. அந்த அருமையான காலகட்டத்தில் மக்கள் கூடி இருந்து கும்பாபிசேகத்தினை கண்டு கழித்தனர். அப்போது அங்குப் பலத்த மழை பொழிந்தது. எனவே பூமி குளிர்ந்தது போலவே மக்களின் மனமும் குளிர்ந்தது. இசக்கியின் குடும்பம் முழுவதும் விநாயகர் வழி பாட்டில் ஈடுப்பட்டார்கள். வெளி மக்கள் அதிகமாக இந்த வழிபாட்டில் ஈடுபடவில்லை. ஆனால் தற்போது அதிகமான மக்கள் வந்து விநாயக பெருமானை வழிப்பட்டுச் செல்கிறார்கள். ஆனாலும் பாபா கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் இசக்கிக்கு இருந்தது. இந்த ஆர்வத்தின் காரணமாகப் பாபா திருக்கோயில் கட்ட முயற்சி செய்தார். அப்போதுதான் செந்தில் ஆச்சாரி என்பவர் அறிமுகம் ஆனார். அவரும் ஸ்ரீசீரடி சாய்பாபாவின் மேல் பக்தி கொண்டவர். இந்த சமயத்தில் பூமி பூஜை போடுவதற்கு நாள் குறிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடி செந்தில் ஆசாரி இந்த பூஜையில் வந்து கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் இசக்கி குடும்பத்தார் செந்தில் ஆசாரியை எதிர்நோக்கிக் காத்து இருந்தனர்.
பகல் 1 1/2 மணி இருக்கும் போது திடீரென்று செந்தில் ஆசாரி அங்கு வேகமாக வந்தார். தெய்வ ஆவேசம் வந்தவர்போல இசக்கியின் இளைய சகோதரர் வாங்கியிருந்த 6 செண்ட் நிலத்தில் உட்கார்ந்துவிட்டார். இந்த இடத்தில் தான் பாபா எழுந்தருளத் திருவுளம் கொண்டிருக்கிறார் என்று கூறி அங்கே செந்தில் ஆசாரி பூமி பூஜை செய்து முடித்தார். தம்பியும் திருக்கோவில் கட்டுவதற்கு தன் மனையைக் கொடுக்க ஒப்புக்கொண்டார். இந்த முறையில் தான் அருள்மிகு ஸ்ரீ செல்வ பால பாக்கிய சீரடி சாய்பாபா திருக்கோயில் பணிகள் தொடங்கி படிப்படியாக நிறைவு பெற்று. கடந்த 27.01.2021 கும்பாபிஷேக திருவிழா நடந்து முடிந்தது. அதன் பிறகு பல அற்புதங்களைத் தருவை கிராமத்தில் செய்ய ஆரம்பித்தார் சாய்பாபா.
அவை என்ன?
( நதி வற்றாமல் ஓடும்)