நவதிருப்பதி கோவில்களில் பகல்பத்து திருவிழா தொடங்கியது. வருகிற 13-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் முதலாவது தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், 7-வது தலமான தென்திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் கோவில், 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார்கோவில் உள்ளிட்ட கோவில்களில் திருஅத்யயன உற்சவம் (பகல்பத்து, ராப்பத்து) விழா தொடங்கியது.
இக்கோவில்களில் நேற்று (3-ம் தேதி) முதல் 12-ம் தேதி வரை பகல்பத்து திருமொழித் திருநாளாகவும், 13-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ராப்பத்து திருவாய்மொழி திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் பகல்பத்து மண்டபத்தில் சுவாமி கள்ளபிரான் எழுந்தருளி சேவித்தல் நடைபெற்றது.
பகல்பத்து திருவிழாவில் இன்று தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் சுவாமி நாச்சி யாருடன் மண்டபத்தில் எழுந்தருளி திருப்பல்லாண்டு ஆரம்பம் அருளிப்பாடு சேவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் காலையில் சுவாமி திருக்கோலத்தில் சேர்த்தியில், பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ராப்பத்து திருவிழாவின் முதல் நாளான வருகிற 13-ம் தேதி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. அன்று இரவு சேஷ சயனம் இரவு 9 மணிக்கு விஸ்வரூபம், திருப்பாவை சாத்துமுறை, இரவு 1 மணிக்கு பரமபதவாசல் திருகாப்பு நீக்கி, கொட்டகை பத்தி உலாவுதல், மண்டபத்தில் சுவாமி எழுந்தருளல், திருவாய்மொழி தொடக்கம் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து ராப்பத்து திருவிழாவின் கடைசி நாளான 23-ம் தேதி வரை தினசரி ராப்பத்து திருவாய்மொழி பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளல் நடைபெறுகிறது. பகல்பத்து நாட்களில் காலையில் சுவாமி உடையவர் சன்னதியிலிருந்து ஆச்சாரியர்களுடன் புறப்பட்டு சுவாமி நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளி அருளிப்பாடு பெற்று பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாள், நாச்சியார், சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளினார்.
பின்னர் திருப்பல்லாண்டு அரையர் சேவை நடைபெற்றது. தினமும் காலையில் பெருமாள், நாச்சி யார் ஆஸ்தானத்திலிருந்து அலங்கார வாத்தியங்களுடன் சுவாமி நம்மாழ்வார் ஆஸ்தானத்தில் இருந்து தாலாட்டு வாத்தியங்களுடன் எழுந்தருளு கின்றனர். தினமும் அரையர் சேவையாக சென்னியோங்கு, திருப் பாவை, ஊனேறு செல்வம் போன்றவை நடைபெறுகிறது.
ராப்பத்து திருவிழாவின் முதல் நாளான 13-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரவில் சொர்க்கவாசல் திறக்கப் படுகிறது. விழாவின் நிறைவு நாளான 23-ம் தேதி சுவாமி நம்மாழ்வார் வீடு விடை, திருமஞ்சனம் நடக்கிறது.


