திருமதி சுகந்தி அன்னத்தாய் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். காலையிலிருந்தே பணி அதிகம், ஆகவே ஒரு வடையும் டீயும் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என நினைத்துத் தம்பி சுரேஷ் அவர்களிடம் கூறினேன். அவர் ஆர்.டி.ஓ. அலுவலகச் சாலையில் வனத்துறை அலுவலகத்திற்கு எதிரே அருமையான கடை உள்ளது எனக் கூறி என்னை அழைத்துச் சென்றார்.
அங்கே அமர்ந்தவுடன் சிரித்த முகத்துடன் சப்ளையர் கோபிநாத் வந்து பரிமாறினார். தண்ணீர் நல்ல சுவையாக இருந்தது. உணவகத்தின் பெயர் ‘உடுப்பிஸ் ஸ்ரீ போஜன்’. பெயரைப் பார்த்தால் ஏதோ கர்நாடகாவிலிருந்து வந்திருப்பார்கள் போல என நினைத்தேன். இந்த உணவிற்கான விலைப்பட்டியலும் பிரம்மாண்டமான உணவகத்தில் இருப்பது போல இல்லை; குறைவாகவே இருந்தது. சாப்பிட்டு முடிந்தவுடன் சப்ளையர் கோபிநாத், “வாருங்கள், உங்களை எங்கள் உரிமையாளர் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்” என்றார். நானும் தம்பி சுரேஷ் அவர்களும் அவர் பின்னால் சென்றோம். பின்னால் சமையலறையில் சமையலுக்குத் தேவையான பொருள்கள் எல்லாம் இயற்கை மாறாமல் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
உள்ளே நுழைந்தோம். உரிமையாளர் திரு. ராஜேஷ் அவர்களைச் சந்தித்தோம். முதலில் பேசிக்கொண்டிருக்கும்போது இவர் நிச்சயம் வெளிமாநிலத்துக்காரராகத்தான் இருப்பார் என நினைத்துக்கொண்டேன். சிறிது நேரத்தில், “தண்ணீர் குடித்தீர்களே, எப்படி இருந்தது?” என்றார். “சுவையாக இருந்தது” என்றேன். “பாபநாசத்தில் தாமிரபரணி மாசுபடாமல் இருந்தால் எப்படிச் சுவையாக இருக்குமோ, அதுபோலவே சுவையுடன் இருக்க வேண்டும் என இந்தத் தண்ணீரைச் சீரமைத்திருக்கிறோம்” என்றார். “அப்படியென்றால் பாபநாசத்திற்கு மேலே இருந்து தினமும் தண்ணீர் கொண்டு வருகிறீர்களோ?” எனக் கேட்டேன். “இல்லை, அந்தத் தரத்துடன் தண்ணீரை நாங்கள் இங்கேயே சரிசெய்கிறோம்” என்றார். அதோடு மட்டுமல்லாமல், “தாமிரபரணி தண்ணீரை வைத்துத்தான் அல்வாவே திருநெல்வேலியில் பிரபலம். தற்போது அந்த அல்வா சுவை குறைந்துவிட்டது. பழைய தாமிரபரணி தண்ணீரின் சுவையுடன் அல்வா உருவாக்கி, அதற்குத் ‘தாமிரபரணி அல்வா’ எனப் பெயர் வைத்து விற்பனை செய்யப்போகிறோம்” என்றும் கூறினார்.
“நீங்கள் குடித்த காபிப் பொடி இங்கேயே தயார் செய்வது. எதிலும் இயற்கை உணவை மீறி நாங்கள் வேதிப்பொருள்கள் எதுவும் சேர்ப்பதில்லை” என்றார். சந்தோஷமாக இருந்தது.

“சரி, உங்களுக்கு எந்த ஊர்?” என்று கேட்டால், “என் மனைவிக்கு கர்நாடகா” என்றார். ஆகா, அப்போது இவருக்கும் சென்னை பகுதியாக இருக்கும் என முடிவுசெய்துவிட்டேன். ஆனாலும், “நீங்கள் எங்கே படித்தீர்கள்?” என்று கேட்டபோது, “செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி” என்றார். “ஆகா! நம்ம ஊரா?” என்று ஆர்வத்துடன் கேட்டபோது, “எனது தாத்தா-பாட்டி தூத்துக்குடி சுதந்திரப் போராட்டத் தியாகிகள்” என்றார். எனக்குச் சந்தோஷம்!
ஏனென்றால், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்’ என்ற நூலை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நான் எழுதி வெளியிட்டவன். ஆகவே, தியாகியின் பெயரைக் கேட்டேன். ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன்! தூத்துக்குடி தியாகிகளான திரு. கந்தசாமி தேவர் – திருமதி ஜானகி அம்மாள் ஆகியோரின் பேரன் என்று கூறினார். இந்தத் தம்பதியினர் விடுதலைப் போராட்டத்திற்காகப் போராடியவர்களில் முக்கியமானவர்கள். எனது நூலில் அவர்கள் இருவரின் வரலாற்றையும் பதிவு செய்திருந்தேன். இவரின் தந்தை திரு. சிவசுப்பிரமணியன் அய்யா என்னோடு தொடர்பில் இருப்பவர். அவரது மகன்தானா இவர் என்று நினைத்தபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
சுதந்திரப் போராட்டத் தியாகியின் வாரிசு என்பதால், நிச்சயம் தாமிரபரணி தண்ணீரின் சுவையை நமக்குக் குடிக்கத் தந்தது போலவே, வருங்காலத்தில் தாமிரபரணி அல்வாவையும் உருவாக்கிவிடுவார் என நம்பிக்கை பிறந்தது. அவருடன் நானும் தம்பி சுரேஷ் அவர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
வாழ்த்துகள் அய்யா! தொடரட்டும் உங்கள் பணி. வாய்ப்புக் கிடைத்தால் என்.ஜி.ஓ. காலனி ‘உடுப்பிஸ் ஸ்ரீ போஜன்’ உணவகத்திற்குச் செல்லுங்கள். தாமிரபரணி சுவையை அறிவீர்கள்.
அன்புடன்,
முத்தாலங்குறிச்சி காமராசு


