எழுத்தாளர் அ. சுகந்தி அன்னத்தாய் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நெல்லையில் நடைபெற்றது.
தமிழகத்திலேயே சொந்தக் கட்டிடத்தில் இயங்கிவரும் பெருமை கொண்டது திருநெல்வேலித் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம். தற்போது, இந்த மையத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பண்பாட்டு மையக் கட்டிடத்தைப் பழுதுபார்த்து, அதை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து, நிறைய உறுப்பினர்களைச் சேர்த்து மையத்தினை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான நிர்வாகிகள் மேம்படுத்தி வருகின்றனர்.
இந்தக் கட்டிடத்தில், தாமிரபரணி தந்த கலைமகள் எழுத்தாளர் திருமதி அ. சுகந்தி அன்னத்தாய் அவர்களின் மூன்று நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ‘பொருநை முதல் நைல் வரை’, ‘குறள் நெறிப்பயணம்’, ‘புன்னகைப்பந்தல்’ ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு மையத்தின் துணைத்தலைவர் புத்தனேரி கோ. செல்லப்பா தலைமை வகித்தார். துணைச்செயலாளர்கள் முனைவர் கட்டளை கைலாசம், பாப்பாக்குடி இரா. செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் வழக்கறிஞர் ம.சு. சுதர்சன் வரவேற்றார்.
‘பொருநை முதல் நைல் வரை’ நூலை நான் வெளியிட, பாளையங்கோட்டை தாசில்தார் மாரிராஜா வரத் தாமதமான காரணத்தினால், தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் கனகலட்சுமி பெற்றுக்கொண்டார். பேராசிரியர் ராமையா கருத்துரை வழங்கினார்.
‘குறள் நெறிப்பயணம்’ நூலை இளமுனைவர் இராம. வேங்கடாச்சலம் வெளியிட, காவல் உதவி ஆணையாளர் ராஜமுரளி பெற்றுக்கொண்டார். முனைவர் ஹரிஹரன், வழக்கறிஞர் மு.மு. தீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
‘புன்னகைப்பந்தல்’ நூலை ஆலடி எழில்வாணன் வெளியிட, பாளை வட்டாட்சியர் மாரிராஜா பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் பழனி கருத்துரை வழங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் முனைவர் இராமச்சந்திரன், காஜா முகைதீன், புன்னைச்செழியன், அப்துல் ஜப்பார், சக்தி பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். செயற்குழு உறுப்பினர் செல்வம் நன்றி கூறினார். எழுத்தாளர் சுகந்தி அன்னத்தாய் ஏற்புரை வழங்கினார்.
எழுத்தாளரின் முதல் நூல் இந்தத் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தில்தான், காவ்யா சண்முகசுந்தரம் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் வெளிவந்தது. அப்போது என்னுடைய நூலான *‘தலைத்தாமிரபரணி’*யையும் வெளியிட்டோம். அதன் பிறகு காவ்யா பதிப்பகத்தில் எங்களிருவருடைய நூல்கள் ஒவ்வொரு ஆண்டும் நெல்லையில் வெளியிடப்படும்.
நான் ஜமீன்தார்களைத் தேடி எழுதிய காலத்தில், ஊத்துமலை ஜமீன்தார் நூலை வெளியிட்டார். எழுத்தாளர் காவ்யா சண்முகசுந்தரம் ஐயா, தனது தகப்பனார் சுடலைமுத்து தேவர் பெயரில் விருது வழங்கும் போது, எனக்குத்தான் பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையுடன் முதல்முதலில் வழங்கினார். இரண்டாம் வருடம், அவரது தாயார் இசக்கியம்மாள் விருதை எழுத்தாளர் சுகந்தி அன்னத்தாய் அவர்களுக்கு வழங்கினார்.
‘பொருநை முதல் நைல் வரை’ நூலில் பொருநை அருங்காட்சியகம், சாத்தூர் பாலம் பற்றிப் பேசும் போதெல்லாம் என்னை மேற்கோள் காட்டியிருந்தார்; அவருக்கு எனது நன்றிகள்.
சென்னையில் கடந்த வருடம் இவரது நூலை, எனது நண்பரும் நான் கௌரவத் தலைவராக இருக்கும் ‘சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்க’த்தின் பொதுச்செயலாளர் சங்கர் மணி பெற்றது எங்களுக்குக் கூடுதல் பெருமை.
நெல்லை விழாவில் நிறைய ஆளுமைகள் முன்வரிசையில் அமர்ந்திருக்க, விழா இனிதே நடந்தது. இடையில் தம்பி சுரேஷ் அவர்களுடன் அருகில் உள்ள டீ கடைக்குச் சென்று வந்தோம். அங்கே ஒரு தாமிரபரணி வரலாறு எங்களுக்காகக் காத்திருந்தது; அதை மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.
அன்புடன்,
முத்தாலங்குறிச்சி காமராசு


