தூத்துக்குடியில் களப்பணி அறிக்கையை ஒப்பந்த செவிலியர்களுக்குச் சாதகமாக அனுப்பக் கோரும் அதிகாரிகளைக் கண்டித்து கிராமப்புற செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கிராமப்புறச் செவிலியர்கள் செய்த களப்பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்கள் செய்ததாக அறிக்கை அனுப்ப வற்புறுத்தும் சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகக் கிராமப்புறச் செவிலியர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கிராமப்புறச் சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் கிராமப்புறச் செவிலியர்கள், கிராமங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரம்பக் கட்டப் பரிசோதனை முதல் பிரசவம் வரையிலான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து வருகின்றனர். மேலும், வீடுகளுக்கே நேரில் சென்று பல்வேறு அவசியமான மருத்துவ சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றனர்.
இதனிடையே, 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் ஆண்டுதோறும் பணி நீட்டிப்பு பெற்று, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கணக்கெடுப்புப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஒப்பந்தச் செவிலியர்கள், நிரந்தரச் செவிலியர்களான கிராமப்புறச் செவிலியர்கள் செய்த களப்பணிகளையும் தாங்களே செய்ததாக அரசுக்கு தவறான அறிக்கை அனுப்பி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்கு ஆதரவாகச் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும், கிராமப்புறச் செவிலியர்களின் பணி குறித்த அறிக்கைகளை ஒப்பந்தச் செவிலியர்களுக்குச் சாதகமாக வழங்கும்படி தங்களைக் கட்டாயப்படுத்துவதாக நிரந்தரச் செவிலியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தங்களின் உழைப்பைச் சுரண்டும் ஒப்பந்தச் செவிலியர்களைப் பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும், அவர்களுக்குச் சாதகமாகச் செயல்படும் சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கண்டித்தும் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டம், அமைப்பின் மாநிலத் துணைத் தலைவி ஷகிலா பானு தலைமையில், தூத்துக்குடி மாவட்டத் தலைவி தங்க புஷ்பம் மற்றும் மாவட்டச் செயலாளர் சுதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிராமப்புறச் செவிலியர்கள், ஒப்பந்தச் செவிலியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனிடம் அவர்கள் நேரில் வழங்கி முறையிட்டனர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான கிராமப்புறச் செவிலியர்கள் கலந்துகொண்டனர்


