கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவின் 9-ஆம் நாள் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகளும், காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரங்களிலும் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் 9-ஆம் நாளான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
காலை 6 மணிக்கு மேல் உற்சவர் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 9 மணிக்குத் தேர் புறப்பாடு நடைபெற்றது. கருணாநிதி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், அறங்காவலர் குழுத் தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் ரவீந்திரன், திருப்பதி ராஜா, வணிக வைசிய சங்கத் தலைவர் வெங்கடேஷ், மண்டகப்படிதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘ஓம் சக்தி பராசக்தி’ என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர், காலை 11.20 மணிக்கு நிலையைச் சென்றடைந்தது. தொடர்ந்து அம்மனுக்குச் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
மணியாச்சி டி.எஸ்.பி. கண்ணன், விளாத்திகுளம் டி.எஸ்.பி. சுந்தரபாண்டி ஆகியோர் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
விழாவில், நாளை (புதன்கிழமை, நவம்பர் 4) மதியம் 1 மணிக்குத் தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக் கோலத்தில் எழுந்தருளுகிறார். மாலை 6 மணிக்குச் சுவாமி ரிஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்குக் காட்சி கொடுக்கும் தபசுக் காட்சி வைபவம் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை, நவம்பர் 5) இரவு 8 மணிக்குச் சிகர நிகழ்வான சுவாமி – அம்மன் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளைத் திருக்கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) காந்திமதி, கோவில் பணியாளர்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.


