அறிஞர் அயோத்திதாசருக்கும் நினைவு மண்டபம்
முதலமைச்சர் அறிவிப்பு.
தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித்
தலைவர் அ.வியனரசு அறிக்கை.
====================
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் ,
வன்னியர்குல தமிழர் சமூகத்திற்குக் கல்வி- வேலைவாய்ப்புகளில் 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கேட்டு 1987 செப்டம்பரில் நடத்திய ஒருவாரகால சாலைமறியல் போராட்டத்தின் போது, காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவர்களை “சமூக நீதி போராளிகள்” என ஏற்று அவர்கள் இருபத்தியோர் பேர்களுக்கும் விழுப்புரத்தில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என றிவித்திருப்பதையும் தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி சார்பில் வரவேற்கிறோம்.
முதன் முதலில் 1881 ஆம் ஆண்டு வெள்ளையர் காலத்தில் நடைபெற்ற குடிமக்கள் கணக்கெடுப்பின் போது மண்ணின் மைந்தர்களான தொல்குடி தமிழர்கள் தங்களை “பூர்வகுடி தமிழர்கள்” என அடையாளப்படுத்தி பதிவுசெய்யக் கோரிய “தமிழறிஞர் அயோத்திதாச பண்டிதர்” வாழ்ந்த வட சென்னையில் அவர் புகழ் பரப்பும் வகையில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருப்பதைத் தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி வரவேற்கிறது.
தனி இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினரால் மாண்டுபோன இருபத்தியோர் நபர்களின் நினைவாக விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைப்பது அவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்குவது என்று அறிவித்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறது.
தமிழ்நாட்டின் சீர்திருத்த கருத்துகளை முதன் முதலாக வழங்கிய தமிழ்த் தேசிய உணர்வை இந்த நாட்டு மக்களுக்கு எடுத்து ஊட்டிய “ஒரு பைசா தமிழன்” ஏட்டினை நடத்திய ஐயா அயோத்திதாசர் பண்டிதர் அவர்களுக்கு அவர் வாழ்ந்த வடசென்னை பகுதியில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதையும் தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி சார்பில் வரவேற்கிறோம்.
அதோடு தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு சில செய்திகளைக் கொண்டுவந்து வேறுசில கோரிக்கைகளை வேண்டுகோளாகவும்
தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி முன்வைக்கிறது.
தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரிய 2018 மே-22 ஆம் நாளில் நடைபெற்ற மக்கள் திரள் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த 13 பேர் மற்றும் அதற்குப்பின் உயிரிழந்த இரண்டு பேர் என 15 பேர்களுக்கும் நினைவுச் சின்னம் எழுப்பிய வேண்டும்.
அதேபோல் மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் 1999 சூலை-23 அன்று தங்கள் வாழ்வுரிமைக்காக நடத்திய தொழிலாளர் பெருந்திரள் பேரணியில் கலவரத்தை ஏற்படுத்தி தாமிரபரணி ஆற்றில் 17 பேர்களைத் தள்ளியும் தடியடி நடத்தியும் காவல்துறையினர் மேற்கொண்ட தகாத வன்செயல்களால் மரணித்த விக்னேசு என்ற ஒரு அகவை பூந்தளிர் உள்ளிட்ட 17 தமிழர்களுக்கும் நினைவிடம் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம் .
தமிழ்நாட்டில்1965 ஆம் ஆண்டில் ஆதிக்க இந்தியை எதிர்த்தும் அன்னைத் தமிழ் மொழியைக் காத்திடவும் உடல் மண்ணுக்கு !
உயிர் தமிழுக்கு ! என மூன்டெழுந்த மொழிப் போராட்டத்தில் தனது உடலை மாய்த்துக் கொண்ட விருகம்பாக்கம் அரங்கநாதன், மயிலாடுதுறை சாரங்கபாணி, விராலிமலை சண்முகம்,
கோடம்பாக்கம் குமார், கீழப்பழுவூர் சின்னசாமி, கீரனூர் முத்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் இராசேந்திரன் மற்றும் 1938 இல் நிகழ்ந்த முதல் இந்தி மறுப்பும் போராட்டத்தில் ஈடுப்பட்டு சிறை சென்ற போது சிறைக் கொட்டடிக்குள்ளே மரணத்தைத் தழுவிய நடராசன், தாளமுத்து உள்ளிட்ட எண்ணற்ற தமிழினப் போராளிகளின் உயிர் ஈகத்தைப் போற்றும் வகையில் மாவட்டம் தோறும் அவர்களுக்கு நினைவு சின்னமும் சென்னையில் மணிமண்டபமும் அமைக்க வேண்டும் எனவும் திராவிடக் கட்சிகள் கடைப்பிடிக்கும் சனவரி-25 ஆம் நாளை அன்னைத் தமிழ் காப்பு உறுதி ஏற்பு நாளாகவும் அறிவிக்க தமிழ்நாடு அரசை
தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
அதுபோல் 1957 இல் தென்தமிழ்நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த சாதி ஆதிக்க எதிர்ப்புப் போரில் படுகொலைக்குள்ளான விடுதலைப்போராட்ட வீரரும் சமூகசமநீதி போராளியாகவும் கோடிக்கணக்கான மக்களால் நேசிக்கப் படும் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் மணிமண்டபம் அமைக்கோரி நீண்ட காலமாக தொடர்புடைய மக்கள் கோரி வருகிறார்கள் அக்கோரிக்கையையும் ஏற்று தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 64 ஆவது நினைவேந்தல் வீரவணக்க நாளில் அறிவிப்பு செய்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வேண்டுமாய் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி வேண்டிக் கொள்கிறது.


