செக்காரக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பணி மாறுதல் பாராட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் ஜனனி. இவர் மக்களோடு மக்களாக பழகி நோய்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இதனால் செக்காரக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இவர் மீது பாசத்தை கொட்டி பழகி வந்தனர்.
இவர் இந்த பகுதிக்கு வந்த பிறகு இங்கு நடைபெறும் பிரசவங்கள் அனைத்தும் சுகப்பிரசவமாகவே நடந்தது. இதுவும் இந்த டாக்டர் வந்த ராசி என்றே அனைவரும் கருதி வந்தனர். இந்த நிலையில் இவருக்கு சாயர்புரம் அருகே உள்ள செபத்தையாபுரத்திற்கு பணி மாறுதல் ஆகி உள்ளது.
இதனை முன்னிட்டு செக்காரக்குடி பொதுமக்கள் இன்று ஒன்று கூடி ஊராட்சி மன்ற தலைவர் ராமலெட்சுமி தலைமையில் பணி மாறுதல் பாராட்டு விழா நிகழ்ச்சி செக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் டாக்டர் ஜனனிக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.


