மே மாத வெயில் பூமிப் பந்தை சூடாக்கிக் கொண்டிருக்க பொதிகை மலை இளவரசியோ குளிர்ச்சியுடன் தூறலும், சாரலுமாக
புள்ளினங்களின் கீச்சொலிகளுடன் ரம்மியமான சூழலுடன் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறாள்.இந்த இதமான சூழலை அனுபவித்தபடி சென்று கொண்டிருக்கும் பயணத்தில் நாங்களும் உடன் வருகிறோம்.அங்கே உச்சியில் பனிமலை தோன்றத்துடன் காட்சி தரும் பொதிகை மலையின் தோற்றத்தை புகைப்படத்தில் பார்க்கும் போது பிரம்மிக்க வைக்கிறது. இது நம்மண்ணின் மலையா..? அல்லது
இமயமலையா..? என்று எண்ணும் அளவிற்கு ஜொலிக்கிறது.
பொதிகை
மலை பயணத்தில் எதையும் சட்டை செய்யாமல் பயணித்தாலும் அட்டை நம்மை அறியாமல் வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதையும் உணர முடிகிறது.
கேரள வனத்துறை உருவாக்கி வைத்துள்ள நீர் வீழ்ச்சியில் குளியலும், அவர்கள் வழங்கிய மூலிகை குடிநீர் மற்றும் கஞ்சியும் புத்துணர்ச்சியுடன் பயணத்தை தொடர பேருதவி புரிந்திருக்கும்.
வழிகாட்டியின் உதவியுடன் செல்லும் பயணத்தில் மனிதர்கள் ஏறுவதற்கே சிரமம் தரும் முட்டு ஏற்றத்தில் யானைகளும் ஏறிச் சென்ற தடங்களை அறியும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது.
ஏழு வகை பனை மரம் மற்றும் கட்டுரையில் பட்டியலிட்டுள்ள ஆபூர்வ மூலிகைகளின் பொக்கிஷமாக விளங்கும் பொதிகை மலையின் அகத்தியர் தரிசனத்தை அடுத்தடுத்த கட்டுரைகளில் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.