பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகள் 11வது தவணை தொகை பெற தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6ஆயிரம் வேளாண் இடு பொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 78 ஆயிரத்து 844 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இதுவரை விவசாயிகள் திட்டத்தில் சேர்ந்த தேதியினை பொறுத்து விவசாயிகளுக்கு 10 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது. தற்போது விவசாயிகள் 11வது தவணை (1.4.22 முதல் 31.7.2022 வரை) தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். தங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் (www.pmkisan.gov.in) ஒ.டி.பி மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.
ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ.சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல் ரேகை பதிவு செய்து விபரங்களை சரிபார்ப்பு செய்யலாம். அதற்கான கட்டணமாக ரூ.15 பொது சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும். மேற்கூறிய 2 முறைகளில் ஏதெனும் ஒரு முறையில் பயனாளிகள் தங்கள் ஆதார் விபரங்களை வருகின்ற 28.02.2022க்குள் திட்ட வலைதளத்த்pல் பதிவேற்றம் செய்ய வேண்டுமென விவசாயிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார் .