திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சீலாத்திக்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவரது மகன்கள் வெட்டும் பெருமாள் (20), பாலமுருகன் (17). இவர்கள் இருவரும் திருநெல்வேலியில் உள்ள லாலா ஸ்வீட் கடையில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தூத்துக்குடியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். தற்போது சொந்த ஊரான சீலாத்திகுளத்தில் புதிதாக வீடு கட்டி உள்ளதால் தூத்துக்குடியில் வாடகை வீட்டில் இருந்த பொருட்களை சீலாத்திகுளத்தைச் சேர்ந்த உறவினர் கோபால் என்பவரது மகன் முத்தரசு(24) என்பவரது லோடு வேனில் ஏற்றிக்கொண்டு நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து வள்ளியூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வண்டிக்குப் பின்னால் வெட்டும்பெருமாள் சகோதரர்கள் வேல்முருகன் மற்றும் தமிழரசன் ஆகியோர் பைக்கில் வந்துள்ளனர். வல்லநாடு அருகே உள்ள முருகன்புரம் பேருந்து நிலையம் அருகே வரும்போது லோடு வேனில் பின்னால் கட்டியிருந்த தார்பாய் அவிழ்ந்துள்ளது. தார்ப்பாயை கட்டுவதற்காக வேனில் வந்த நபர்கள் வண்டியை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு தார்பாயை கட்டியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சகோதரர்கள் வண்டியின் பின்புறம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களும் இறங்கி தார்பாயை கட்டியுள்ளனர்.
அந்த சமயத்தில் தூத்துக்குடியில் இருந்து கேரளாவிற்கு மீன் லோடு ஏற்றி வந்த லோடு வாகனம் ரோட்டின் ஓரமாக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதி அதற்கு முன்னால் நின்று கொண்டிருந்த வாகனத்தின் பின்புறமும் மோதியுள்ளது. இதில் இரு சக்கரவாகனம் தீப்பிடித்து எறிந்துள்ளது. இந்த விபத்தில் வெட்டும்பெருமாளும் பாலமுருகனும் பலத்த காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த அனைவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் மீன்லோடு ஏற்றி வந்த வேன் டிரைவர் அப்துல் வகாத் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் படுகாயம் அடைந்த பாலமுருகன் இன்று அதிகாலை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


