தூத்துக்குடி மாவட்டத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி இன்று துவங்கியது.
தமிழகத்தில் உள்ள நலிவடைந்த பிரிவினர், ரேஷன் கடைகளுக்கு நேரடியாக வந்து பொருட்களைப் பெற்றுச் செல்வதில் உள்ள நடைமுறைச் சிரமங்களைக் களைவதற்காகத் தமிழக அரசு ‘தாயுமானவர் திட்டத்தை’ அறிவித்திருந்தது. இத்திட்டத்தின் கீழ் ஜூன் 2 மற்றும் ஜூன் 3 ஆகிய இரண்டு தேதிகளில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி, தூத்துக்குடி சங்கராபுரம் ரேஷன் கடைக்கு உட்பட்ட ஊழியர்கள், இன்று காலை முதல் பெருமாள்புரம் பகுதியில் வசித்து வரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்குத் தங்களின் வாகனங்கள் மூலம் நேரடியாகச் சென்றனர். அங்கு அவர்களுக்குரிய ரேஷன் பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அவர்களின் வீடுகளிலேயே நேரடியாக விநியோகம் செய்தனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்றது.


