சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். அத்துடன் பத்து நாட்கள் நடைபெற்று வந்த சித்திரை வசந்த திருவிழாவும் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு கோயிலில் அதிகாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தரிசனம் அதிகாலை 5.30 மணிக்கும், உதயமார்த்தாண்ட அபிஷேகம் காலை 6 மணிக்கும் நடைபெற்றது. கோடை விடுமுறை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர்.
இரவு நடைபெற்ற விழாவில், வள்ளி – தேவசேனா அம்மனுடன் சுவாமி ஜெயந்திநாதர் தங்கத் தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வடம் பிடித்துத் தங்கத் தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தொடங்கிய சித்திரை வசந்த திருவிழா, 10-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. மதியம் உச்சிகால பூஜையைத் தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்குச் சாயரட்சை தீபாராதனைக்குப் பின் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன.


