ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து 7 மாத காலமாக நடந்து வருகிறது. அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்தில் கிடைக்கும் பொருட்களும், ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிநாட்டில் உள்ள பொருட்களும் கொண்டு வரப்பட்டு ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும். மேலும் அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்தில் கிடைக்கும் முதுமக்கள் தாழிகள் உள்பட பல்வேறு பொருட்கள் அதே இடத்தில் கண்ணாடிகள் மூலம் மூடி காட்சிப்படுத்தப்படும்.
இதற்காக ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் 9 இடங்களில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அந்த குழிகளில் இருந்து 3000 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் வரையிலான 60க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள் மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் வருகை தந்தார். அவர் அகழாய்வு பணிகளை பார்வையிட்டு ஆய்வாளர்களிடம் நடந்து வரும் ஆய்வுகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின்னர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய பொருநை ஆதிச்சநல்லூர் அறிக்கைகளும், அருங்காட்சியகங்களும் நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முனைவர் கந்தசுப்பு நூலை வெளியிட அருண்ராஜ் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆய்வாளர் எத்தீஸ்குமார், ஆய்வு மாணவர்கள் அருண், மணிகண்டன், குமரசேன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் இயக்குநர் அருண்ராஜ் பேசுகையில்,
ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக சங்க காலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்களின் நாணங்கள் 2 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் 146 ஆண்டுகளாக நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக இந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தில் ஒரு தொட்டியில் கடல் ஆமைகள் உருவம், மரம், யானை, மீன்கள் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் ஆதிச்சநல்லூரில் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததையும் கடல் சார் வாணிபம் நடந்ததையும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


