தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை கிராமத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் புதிய நியாயவிலைக்கடை அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூபாய் 15 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட உள்ள நியாயவிலை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து தொடர்ந்து 40 ஆண்டுகாலமாக வீட்டு மனை பட்டா கேட்டு போராடிய ஆறாம்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த 22 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் பிரம்மசக்தி, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், திமுக மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், கருங்குளம் வட்டாரத்தலைவர் புங்கன், ஜமாத் செயலாளர் அப்துல்கனி, கவுன்சிலர் மைமுன் அப்துல்கனி, ஆறாம்பண்ணை மக்கள் நலச்சங்க தலைவர் சையது, வார்டு உறுப்பினர் இபுராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


