நெல்லை& தூத்துக்குடி மெயின்ரோட்டில் சோதனைக்கு மேல் சோதனையாக பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் சுமார் நான்கு முறைக்கு மேலாக ஓட்டை விழுந்து விட்டது. அதை அடைக்க நெடுஞ்சாலை துறையினர் பல்வேறு முறையில் போராடி வருகின்றனர். ஆனால் சீர் செய்ய இயலவில்லை. இதற்கிடையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் போது தண்ணீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அந்த இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு விடுகிறது. இதனால் பைபாஸ் சாலை தானே என வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. இதுபோலத்தான் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பேருந்து நிறுத்தத்தில் ,சாலையில் மிக பெரிய அளவில் 3 ராட்சச பள்ளங்கள் ஏற்ப்பட்டுள்ளது. இதில் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதால் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். கனரக வாகனத்தில் வருபவர்களும் விபத்தில் சிக்குகிறார்கள்.
மேலும் தண்ணீர் தேங்கி இருப்பதனால் பேருந்துக்கள் சாலையிலேயே நிறுத்தி மக்களை ஏற்றி இறக்கி செல்லவேண்டிய நிலை உள்ளது. இதனாலும் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சமூக சேவகர் வசப்பபுரம் மு. கணேசன் கூறும் போது,
வசவப்பபுரம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினரால் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு, ஒரே வாரத்திற்க்குள் பழுதாகி உள்ளது. அதையும் சரி செய்யாமல் பல மாத காலமாக இழுத்தடிப்பு செய்கிறார்கள்.
இது தொடர்பாக பல முறை மனு அனுப்பியும் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லை.
மேலும் திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வசவப்பபுரம் விளக்கு பகுதியில் பொறியியல் தோல்வி காரணமாக சாலை தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதால் அதிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் நெடுஞ்சாலை துறையை கண்டித்து , எரியாத உயர் கோபுர மின் விளக்கு, மழை நீர் தேங்கும் நெடுஞ்சாலை பகுதி, பள்ளம் ஏற்ப்பட்டுள்ள பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் கருப்பு கொடி ஏற்றி நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு சார்பாக கூடிய விரைவில் கண்டணத்தை பதிவு செய்ய உள்ளோம். எனவே அதற்குள் இந்த பள்ளத்தினை சீர் செய்து தரவேண்டுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து வசவப்பபுரத்தில் இந்த பள்ளத்தினை சீர் செய்து, உயர் கோபுர மின் விளக்குகளை சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


