பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு எட்டயபுரத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது குருபூஜையை முன்னிட்டு முக்குலத்தோர் சங்கம் மற்றும் இளைஞர் அணி சார்பில் மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. நடுமாடு மற்றும் சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடந்தப்பட்ட இப்பந்தயத்தில் மதுரை, திருநெல்வேலி, தேனி, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 48 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
இப்போட்டியை எட்டையபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் இராமலட்சுமி சங்கர நாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நடமாடு பிரிவுகளுக்கு 8 மைல் தூரமும், சின்னமாடு பிரிவுகளுக்கு 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டியில் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றதை சாலையின் இரு புறமும் பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் கூடியிருந்து கண்டுகளித்தனர். இப்பந்தயத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் மெடிக்கல் மாட்டுவண்டி முதல் பரிசை தட்டிச்சென்றது. இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியினர் சார்பில் பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


