தாமிரபரணி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் 41 ஆயிரம் கன அடி நீர் சீறிப்பாய்கிறது.
தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக பாபநாசம் அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக பாபநாசம் அணையில் உள்ள உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 41 ஆயிரம் கன அடி நீர் வீணாக கடலில் கலக்கிறது.
தற்போது உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்கால், அதே போல் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் வடகால் மற்றும் தென்கால் அடைக்கப்பட்டுள்ளது.


