கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் அலகாபாத் நகரம்; அங்கு, ‘ஆனந்த பவனம்’ என்னும் அழகு மாளிகை.
அரண்மனைக்கு ஒப்பான அந்த மாளிகையில் ஒரு இளவரசரை விடவும் மேன்மையாக வளர்க்கப்பட்டவர் ஜவஹர்லால் நேரு.
இவருக்கும் காஷ்மீர் ரோஜாவுக்கு ஒப்பான கமலாவுக்கும் மகளாகப் பிறந்தவர் இந்திரா பிரியதர்ஷினி.
தங்கத் தொட்டில்; வெள்ளித் தட்டு; அலங்கார நடைவண்டி; 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள். இவையனைத்தும் அரண்மனை போன்ற அந்த மாளிகையில் நிரம்பி இருந்தன.
இருந்தும் என்ன பயன்?
சிறுமி இந்திராவின் உறவுகள் எல்லாம் சிறைச்சாலைகளிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் அல்லவா குழுமியிருந்தன.
சிறைவாசம் முடிந்து வரும் தாத்தா மோதிலால் நேருவின் மடியில் சில காலம் விளையாடுவார் சிறுமி இந்திரா.
பிறகு, மீண்டும் கைதாகிச் சிறைக்குச் சென்றுவிடுவார் தாத்தா.
அப்பா ஒரு சிறையில்; அன்னையும், பாட்டியும் அந்நிய நாட்டுத் துணிகளைச் சேகரித்துத் தீயிட்டுக் கொளுத்தும் கண்டன ஊர்வலத்தில்.
இப்படித்தான் நகர்ந்தன சிறுமி இந்திராவின் சிறுவயது நாட்கள்.
உறவினர்களின் சுதந்திர தாகம் சிறுமி இந்திராவுக்கும் இயல்பாகவே ஒட்டிக்கொண்டது.
ஆனந்த பவனத்துக்கு உள்ளேயே மூவர்ணக் கொடி ஏந்திய தியாகி போன்ற பொம்மைகளையும், ஆங்கிலேயே வீரர் போன்ற பொம்மைகளையும் நிற்க வைத்துப் போராடுவதாகக் கோஷம் எழுப்புவார்.
பின்னர், தியாகிகள் வெற்றி பெற்றதாக, அந்த நான்கு சுவர்களுக்குள்ளேயே வலம் வருவார்.
விளையாடும் வயதில் கூட இப்படிப்பட்ட வரலாற்று விளையாட்டுகளை விளையாடியவர் சிறுமி இந்திரா.
‘‘நினைவு தெரிந்த நாளிலிருந்து ஏகப்பட்ட பள்ளிகளில் படித்ததால், அவற்றின் பெயர்களை என்னால் நினைவில்கூட வைத்துக்கொள்ள முடிந்ததில்லை’’ என்று இந்திரா ஒருமுறை சொன்னார்.
வீட்டில் நிலவிய சுதந்திரப் போராட்டச் சூழல், தாயின் உடல்நிலை இவற்றால் இந்திரா, பல ஊர்களில், பல பள்ளிகளில் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
சாந்தி நிகேதனில் இந்திரா படித்தபோது, அவருடன் படித்த சக மாணவி ஒருவர் தனது தங்க நகையைக் காணவில்லை என்று விடுதிக் காப்பாளரிடம் புகார் சொன்னார்.
அவர், இந்திராவின் பெட்டியைத் தவிர, மற்ற மாணவிகளின் பெட்டிகளைச் சோதனையிட விரும்பினார்.
ஆனால், இந்திராவோ தன்னுடைய பெட்டியை முதலாவதாகத் திறந்து காட்டிச் சோதனைக்கு உட்படுத்தினார்.
இறுதியில், அந்த மாணவியின் நகைகள் குளியல் அறையில் இருப்பது தெரியவந்தது.
இந்தச் செயல், இந்திராவின் நேர்மையான குணத்தைப் பிரதிபலித்தது.
தன் மகள் வெறும் ஏட்டுப் படிப்பை மட்டும் பெறுவதில் விருப்பமில்லாதவராக இருந்தார் நேரு.
உலக வரலாற்றையும் இந்திரா தெரிந்துகொள்ள வேண்டும் என அவர் ஆசைப்பட்டார்.
அதன் விளைவாக சிறையில் இருந்தபடி அவர், தன் மகளுக்குக் கடிதங்கள் எழுதத் தொடங்கினார். அதில் உலகம்; இயற்கை; மனித வாழ்வு; ஒவ்வொரு நாட்டின் நாகரிகம், வரலாறு என ஒவ்வொன்றைப் பற்றியும் எழுதினார்.
அவைகள், இந்திராவுடைய தனிமையைத் தகர்த்தன; தந்தையை நேரில் காண்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தின.
‘‘பிறந்தநாளின்போது உனக்கு மற்றவர்களிடமிருந்து பரிசுகளும் வாழ்த்துகளும் கிடைப்பது வழக்கம். நிறைந்த வாழ்த்துகளைப் பெற்றிருக்கும் உனக்கு இந்த நைனி சிறையிலிருந்து நான் என்ன பரிசை அனுப்ப முடியும்?
என்னுடைய பரிசுகள் யாவும் வெறும் மூலக்கூறுகள் மட்டும்தான்’’ என்று பயணிக்கும் அந்தக் கடிதத்தில் தொடர்ந்து,
‘‘பிறர் அறியாமல் ஒளிப்பதற்கும், செய்வதற்கும் நம்மிடம் ஏதுமில்லை. அதனால், பிரகாசமான சூரிய ஒளியில் செய்யப்படும் எந்தச் செயல் குறித்தும் நாம் பயப்படத் தேவையே இல்லை.
இதைப்போலவே நம்முடைய சொந்த வாழ்விலும் சூரியனை நட்புகொண்டு அதன் ஒளியில் நாம் செய்யும் எந்தச் செயலிலும் ரகசியங்களோ அல்லது மற்ற வகையான மறைத்தல்களோ இருக்க வாய்ப்பே இல்லை.
இவ்வாறு ஒளிவுமறைவின்றி நடந்து கொண்டால்தான்
நீ ஒளியின் குழந்தையாக வளர முடியும்.
தைரியம் மட்டும் உன்னோடு இருந்துவிட்டால் போதும்.
மற்ற எல்லா நல்லவைகளும் அதைத் தொடர்ந்து உன்னிடம் வந்துவிடும்’’ என்று நேரு, தன் மகளுக்கு எழுதிய முதல் கடிதத்திலேயே இப்படியான தைரியத்தைப் பதிந்திருந்தார்.
இதுபோன்ற கடிதங்களின் உந்துதல்தான் இந்திராவை ஒரு துணிச்சல்மிக்கப் பெண்ணாக மாற்றியது.
அதனால் தான், அவர் பின்னாளில் இப்படிச் சொன்னார்:
‘‘இளமைக் காலத்திலிருந்தே தைரிய உணர்வு என்னுள் ஒரு நெருப்பாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும்.
இது தேவைப்பட்ட காலத்தில் பெரிதாகப் பற்றி ஒளிவிடும்போதுதான் மற்றவர்களுக்குத் தெரியும்.’’


