1984 அக்டோபர் 31 வெள்ளாளங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பில் ஜேம்ஸ் ஆசிரியர் வரலாறு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். பகல் 11:30 மணியளவில் அந்த இடிபோன்ற துயரச் செய்தி பள்ளி வளாகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தனது மெய்காப்பாளர்களால் சுடப்பட்டார் என்றும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் முதல் தகவல் வந்தது. மதியம் 12:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டதாக சோகச் செய்தி வந்தது.
உண்மையில் இந்திரா சுடப்பட்டது காலை 9:45 மணிக்கு. ஆனால் இவ்வளவு ஊடகங்களற்ற அந்தக்காலத்தில் செய்தி சற்று தாமதமாகவே பரவியதில் வியப்பில்லை. அந்த நேரம் 7 ஆம் வகுபில் எங்களுக்குவரலாறு பாடத்தை நடத்திக் கோண்டிருந்தார்
ஜேம்ஸ் ஆசிரியர் அவர்கள். நடப்பு அரசியலை கூட நையாண்டி செய்து எங்களிடையே பேசுவார். திருமதி இந்திராவின் மரணச் செய்தியைக் கேட்டதும் பாடத்தை “சட்” டென்று நிறுத்தியவர். எங்களிடம் ஒரு கேள்வி கேட்டார். இந்திராகாந்தி கொலையின் பின்னணி என்ன…? என்பதுதான் அந்தக் கேள்வி.
யாருமே சரியாகப் பதில் சொல்லாத நிலையில் “சார் நான் சொல்லட்டுமா? ” என்று கையைத் தூக்கினேன்.
சொல் குமரா…! – என்றார்…!
சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் இந்திரா இராணுவ நடவடிக்கை எடுத்ததன் விளைவாக இருக்கலாம்…!” என்றேன்…!
அவர் என்னை வைத்தகண் வாங்காமல் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சரி…! போய் உட்கார்….!
எனக் கூறிவிட்டு அவசரமாக தலைமை ஆசிரியர் அறைக்கு வருமாறு அழைப்பு வரவே
சென்று விட்டார்…!
அரைமணி நேரத்தில் விடுமுறை அறிவிப்போடு திரும்பி வந்தவர் என்னை அழைத்து மாணவர்கள் நடுவே பாராட்டினார்.குமரன் பிற்காலத்தில் அரசியல்வாதி ஆனாலும் ஆகிவிடுவான் என்றார் அந்த வரலாற்று ஆசிரியர். (அரசியல் ஆர்வம் கொண்ட நான் பின்னாளில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் M.A அரசியல் அறிவியல் படித்துப் பட்டம் பெற்றேன்)
எப்படி இந்த பதிலைக் கூறினாய் என்றார்…?
“பொற்கோவில் இராணுவ நடவடிக்கை” குறித்து செய்திகளைப் படித்திருக்கிறேன்.அந்த நிகழ்விற்குப் பிறகு, சீக்கியர்கள் கோபத்தில் போராட்டங்கள் நடத்தியது குறித்தும் தினசரி செய்தித்தாள்களில் படித்தது குறித்துச் சொன்னேன்.(இதற்கெல்லாம் காரணம் எனது அப்பாதான்.அப்போதே தினசரி செய்தித் தாள்கள் மட்டுமன்றி வார இதழ்களையும் வாங்குவார்கள்.இவ்வளவு ஊடகங்கள் இல்லாத அக்காலத்ததில்அச்சு ஊடகங்களைப் படித்ததில் வியப்பில்லை.சில செய்திகள் குறித்து அப்பா மற்றவர்களுடன் விவாதிப்பதையும் கவனித்திருக்கிறேன்.
அடிப்படையில் காங்கிரஸ் குடும்பம் என்பதால் நேரு குடும்பத்தினர் மீது அளவற்ற பாசமுண்டு. அதிலும் பெரியப்பா SKT இராமச்சந்திரன் அவர்கள் கட்சியில் கோலோச்சிக் கொண்டிருந்தார் என்பதால் அவர்கள் இந்திராவுடன் இருக்கும் படங்கள் எங்கள் வீட்டின் வரவேற்பறையை அலங்கரித்துக் கொண்டிருக்கும்.அதுவே இந்திராவின் மீதான மதிப்பை நம் மனதில் மேலும் உயர்த்தி வைத்திருந்தது.
இறுதிச் சடங்கு நிகழ்வு தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு
அப்போதைய காலகட்டத்தில் எங்கள் வீடு உட்பட ஊரில் மூன்று வீடுகளில் மட்டுமே கருப்பு – வெள்ளை டி.வி இருந்தது.
கூட்டம் கட்டுக்கடங்காது என்பதால் வாடகைக்கு டி.வி எடுத்து வந்து ஆன்டெனாவை உயரமான வாட்டர் டாங்க் கட்டிடத்தில் வைத்து அலைவரிசை தெளிவாகத் தெரிவதற்காக அடிக்கடி ஆன்டெனாவைத் திருப்பித் திருப்பி பார்த்ததும். எங்கள் வீட்டிலிருந்தும், சித்தப்பா வீட்டிலிருந்தும் தேனீர் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கியதும் இன்னும் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது.
அன்று எங்கள் சித்தப்பா உட்பட தீவிர காங்கிரஸ் தொண்டர்கள் நான்கைந்து பேர் பேர் மொட்டை அடித்துக் கொண்டது உணர்வுபூர்வமான தனிக்கதை.


