தூத்துக்குடியில் நண்பர்களுடன் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொன்று புதைக்கப்பட்ட வாலிபர் உடலை போலீசார் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ரோட்டில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தின் பின்புறம் உப்பாற்று ஓடை பண்டு கரை பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலை சில நாய்கள் இழுத்து வெளியே கொண்டு வந்துள்ளன. இதுகுறித்து தகவலின் பேரில் தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் மதன், தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயந்தி தாசில்தார் முரளிதரன் வருவாய் ஆய்வாளர் செல்வ லட்சுமி கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உடல் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் அவர் கோவில்பிள்ளை நகர் சின்னதுரை மகன் அருள்ராஜ் (30) எனத் தெரியவந்தது. கடந்த 27ஆம் தேதி முதல் இவரை காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை தெர்மல் நகர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அருள்ராஜ் கொன்று புதைக்கப்பட்டது தெரியவந்தது. சம்பத்தன்று அவர், நண்பர்களுடன் மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக 4பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து தெர்மல் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்ஸி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


